Saturday, April 19, 2008

சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு கோரி மனு

சென்னை, ஏப். 19: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி, காங்கிரஸ் தலைமை அலுவலகச் செயலாளர் ராஜன், அண்ணா சாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகி யோர் சமீபத்தில் மாவட்ட நிர் வாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். வாசன் ஆதரவாளர்களான அவர்கள் நீக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் வரை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜி.கே. மூப்பனார் பேரவை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் அலுவலகச் செயலாளர் ராஜன், சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்புக்கேட்டு காவல் நிலையத்தில் மனு கொடுத்திருப்பது காங்கிரஸôர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிமுகவினர் விளக்கேற்றி வழிபாடு

சென்னை, ஏப். 19: சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியை கொண்டாடினார்கள். சித்ரா பௌர்ணமி தினத்தன்று அதிமுகவினர் தங்கள் வீட்டு வாசலில் விளக்கேற்றி "இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா' என்று கோஷமிடுமாறு அதிமுக பொதுச்செயளாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி சென்னையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் விளக்கேற்றி சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். வடசென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில் 10 அடி உயர அகல் விளக்கை அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் ஏற்றினார். வட சென்னையில் சுமார் 2,000 பெண்கள் விளக்கேற்றினார்கள்.

தென்சென்னை:

தென் சென்னை மாவட்டத்தில் 10 வட்டங்களில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் சுமார் 5,000 பெண்கள் விளக்கேற்றினார்கள். சைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ செந்தமிழன் உள்ளிட்டோர் விளக்கேற்றினார்கள்.