சென்னை, ஏப். 13: தீண்டாமையை முழுமையாக ஒழிப்பதே டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். அம்பேத்கரின் 118-வது பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தீண்டாமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தாலும், தனது உழைப்பாலும், விடா முயற்சியாலும் படித்து, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகி, அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி என்னும் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது. இன்று அவரது பிறந்த நாளில் இட ஒதுக்கீடு முக்கிய பரிமாணத்தை அடைந்திருப் பது சமூக நீதிக் கொள்கையை இந்த நாடு மதிப்பதன் வெளிப்பாடாகும்.
இங்கொன்றும், அங் கொன்றுமாக நாட்டில் நிகழும் தீண்டாமைக் கொடுமையை முற்றிலும் ஒழித்து, இட ஒதுக்கீட்டின் பலன்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பெருமை சேர்க்கும்.
சாதி, சமய பேதமற்ற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கரின் பிறந்த நாளில் சபதமேற்போம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.