Thursday, April 17, 2008

ஓட்டலில் தோசை விலை உயர்வு: பேரவையில் அதிமுக புகார்

சென்னை, ஏப். 17: ஓட்டல்களில் மிக அதிகமான விலைக்கு தோசை விற்கப்படுவதாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் புகார் கூறினர். பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் விலைவாசி உயர்வு குறித்து அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி கள் பிரச்னையை கிளப்பின. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், "இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்கிறீர்கள். ஆனால் ஒரு தோசை ரூ. 12 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பரிதி இளம் வழுதி, "ஒரு கிலோ அரிசியில் ஆயிரக்கணக்கான தோசை சுடலாம்' என்றார். உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் தோசைக்கான ஓட்டல் "பில்'லை உயர்த்திக் காட்டினார்கள். தோசை விலை ரூ. 12 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப் பன் அது ஸ்டார் ஓட்டலில் உள்ள விலையாக இருக்கும் என்றார். தோசை பற்றிய இந்த விவாதத்தினால் பேரவை கலகலப்பாக இருந் தது.

அம்பத்தூர் தாலுகா மூன்றாகப் பிரிக்கப்படுமா?'

சென்னை, ஏப். 17: அம்பத்தூர் தாலுகாவை பிரிப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

டி. சுதர்சனம் (காங்கிரஸ்):

அம்பத்தூர் தாலுகாவில் 15 லட்சம் வாக்காளர் உள்ளனர். இந்தத் தாலுகாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தாசில்தாரை எப்போது சென்றாலும் பார்க்க முடிவதில்லை. எனவே அம்பத்தூர் தாலுகாவை, அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் என்று மூன்றாக பிரிக்க வேண்டும்.

அமைச்சர் ஐ. பெரியசாமி:

அம்பத்தூர் தாலுகாவை பிரிப்பது அரசின் ஆய்வில் உள்ளது. தாம்பரம் தாலுகாவில் 18 லட்சம் மக்கள் தொகை உள்ளது. ஒரு தாலுகாவில் ஒன்று முதல் 5 லட்சம் வரைதான் மக்கள் தொகை இருக்கலாம். மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பெருநகரங்கள், மலைப் பகுதிகளை சிறப்பு நிகழ்வாகக் கருதி அங்கு தாலுகாவைப் பிரிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.

வை. சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):

ஒரு நாடாளுமன்ற தொகு திக்கு ஒரு மாவட்டம் அமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது அதுபற்றி பரிசீலிக் கப்படும் என்று முதல்வர் கருணா நிதி கூறினார். அந்தத் திட்டம் எந்த நிலையில் உள்ளது?

ஐ. பெரியசாமி:

ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அது பற்றி முதல்வர் முடிவு செய்வார்.

ஜி.கே. மணி (பாமக):

சென்னை மாநகராட்சியை இரண்டாகப் பிரிப்பதற்கு அரசு ஆவன செய் யுமா?

ஐ. பெரியசாமி:

கடந்த 2 ஆண்டுகளில் 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியை இரண்டாகப் பிரிப்பது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர்தான் முடிவு செய்யவேண்டும்.

உயர் வருவாய் பிரிவினர் நீக்கம் பற்றி திமுக உயர்நிலைக் குழுவில் முடிவு

சென்னை, ஏப். 17: 27 சதவீத இட ஒதுக்கீட்டில் உயர் வருவாய் பிரிவினர் நீக்கம் பற்றி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள திமுக உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் வியாழக்கிழமை இது குறித்து நடைபெற்ற விவாதம்:

ஜி.கே. மணி (பாமக):

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் இருந்து உயர் வருவாய் பிரிவினரை நீக்கும் "கிரீமி லேயர்' முறை இருப்பது சரியல்ல.

திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இந்த இட ஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பை அதிக ரிக்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வந்துள்ளன. இது வருத்தம் அளிக்கிறது. "கிரீமி லேயர்' முறையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு "கிரீமி லேயர்' பற்றி பேசும்போது, வேண்டுமானால் வருமான உச்சவ ரம்பை அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதாக பத்திரிகையில் வந்ததை ஜி.கே. மணி இங்கே சுட்டிக் காட்டினார். டி.ஆர். பாலு அப்படி சொல்லியிருந்தால் அது தவறு. அது திமுகவின் கொள்கை அல்ல.

"கிரீமி லேயர்' வேண்டாம் என்பதுதான் திமுகவின் கொள்கை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. "கிரீமி லேயர்' இருக்கிறது என்பதற்காக அந்த மகிழ்ச்சியை நாம் கைகழுவி விடக் கூடாது. இந்த மகிழ்ச்சியோடு கவலை யும் இருக்கிறது. அதை நாம் போக்க வேண்டும். அது பற்றி கூட்டணிக் கட்சி நண்பர்களோடு பேசி நல்ல முடிவை எடுப்போம். வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) நடக்க உள்ள திமுக உயர்நிலைக் கூட்டத்தில் இது பற்றி முடிவு செய்யப்படும்.

சோனியா காந்தியுடன்...:

இந் தப் பிரச்னை குறித்து ஐக்கிய முற் போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன் மோகன் சிங், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோரிடம் தொலை பேசியில் பேசியுள்ளேன். இதில் நாம் படிப்படியாக முன்னேறு வோம் என்று அவர்கள் நம்பிக்கையான உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.எதிர்கால சந்ததியினரை கல்வி துறையில், சமுதாயத் துறையில், சமூக நீதி துறையில் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை நாம் கைவிட்டு விடக்கூடாது. அதற்காகத்தான் நாம் பொறுமையாக இருக்கிறோம் என்றார்.

அறப் போராட்டமா? அரைப் போராட்டமா?

சென்னை, ஏப். 17: விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் நடத்திய வெளிநடப்பு, அறப் போராட்டமா? அரைப் போராட்டமா? என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளிநடப்பு செய்த சில நிமிஷங்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவைக்குத் திரும்பினார்கள். அப்போது விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் அவைக்கு வருவதைக் கவனித்த முதல்வர், "அரைப் போராட்டம் என்ற காரணத்தால்தான் வெளியே சென்றவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்' என்றார்.

முதல்வர் தனது பேச்சை முடித்ததும் அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, "முதல்வர் எங்களின் அறப் போராட்டத்தை அரைப் போராட்டம் என்று கூறினார். அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். விலைவாசி உயர்வு பிரச்னையில் எங்களின் எதிர்ப்பைக் காட்டவே வெளிநடப்பு செய்தோம். இப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க வந்துள்ளோம்' என்றார்.

அதிமுக, கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

சென்னை, ஏப். 17: விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் இடதுசாரிகள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தன. பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம்:

வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):

மத்திய அரசின் தவறான கொள்கையினால் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக ஆன்-லைன் வர்த்தகத்தையும், உணவுப் பொருள்களின் ஏற்றும திக்கும் தடை விதிக்க வேண்டும்.மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்து நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:

இந்தக் கூட் டத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து விலைவாசி உயர்வு குறித்து நாங்கள் பேரவையில் பிரச்னை எழுப்பி வருகிறோம். ஆனால் விலைவாசி மட்டும் குறையவில்லை. விலைவாசி மத்திய, மாநில அரசுகளின் கைகளைவிட்டு நழுவி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 20 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய் கிறோம்.

டி. சுதர்சனம் (காங்கிரஸ்):

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நான்கு ஆண்டுகளாக மத்திய அர சுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது தேர்தல் வருகிறது என்பதற்காக விலைவாசி உயர்வு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.

விலைவாசி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்கிறார்கள். சீனாவில் 10.4 சதவீதமும், அமெரிக்காவில் 17.6 சவீதமும் பணவீக் கம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது கச்சா எண்ணெய் ஒரு பீப் பாய் 44 டாலராக இருந்தது. இப் போது 115.5 டாலராக உயர்ந்துள்ளது. அரபு நாடுகளில் கச்சா எண் ணெயின் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாகத்தான் விலைவாசி உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எம்.பிக்கள் இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன் உறுப்பினராக உள்ளார்.அங்கு அவர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பி இருக்கலாம். வேண்டுமென்று தேர்தல் "ஸ்டண்டுக்காக' இந்தப் பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். எதிரில் குத்தாமல் முதுகில் குத்தியிருக்கிறார்கள்.

முதல்வர் கருணாநிதி:

விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் பேசி, அதற்கு விளக்கம் பெறாமல் கம்யூனிஸ்ட் நண்பர்களும், அ.தி.மு.க.வினரும் வெளிநடப்புச் செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது. வெளிநடப்பு என்ற ஜனநாயக முறையை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நான் எரிச்சலோ, காழ்ப்புணர்வோ கொள்ளவில்லை என்றார்.

மார்க்சிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்த சற்று நேரத்தில் மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாக புறக்கணித்தனர்.

தடுப்புச் சுவர் மீது மின்சாரம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

சுவர் மீது மின்சாரம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் சென்னை, ஏப். 17: மதுரை மாவட்டம் எழுமலை என்ற ஊருக்கு அருகில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் தீண்டாமையின் அடையாளமாக உள்ள தடுப்புச் சுவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவதாக "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அதன் மாநில அமைப் பாளர் பி. சம்பத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு உத்தபுரம் தடுப்புச் சுவர் மீது இரும்புக் கம்பிகளைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தீண்டாமையின் அடையாளமாக உள்ள அந்தச் சுவரையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலைவாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன. அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும். எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது.

எது முக்கியம்?:

மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்:

மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது. அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.

வெளிநடப்பு முறையல்ல:

மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி.

சுடுகாட்டால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு

சென்னை, ஏப். 16: சுடுகாட்டுப் பிரச்னையால்தான் பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படு வதாக விடுதலைச் சிறுத் தைகள் எம்.எல்.ஏ. செல்வம் தெரி வித்தார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

கிராமங்களில் சுடுகாட்டுப் பிரச்னையால்தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் சுடுகாட்டுப்பாதை ஆதிக்க வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். திருநெல்வேலி, நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.

அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதி வழங்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் சூரியஒளி மூலம் இயங்கும் மின் தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும். அனைத்துப் பேரூராட்சி பகுதிகளிலும் மின்தகன மேடைகள் அமைக்க வேண்டும் என்றார் செல்வம்.

எஸ்.சி. மக்கள் கோயில் கட்ட ரூ.50 ஆயிரம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை, ஏப். 16: தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் கோயில் கட்ட ரூ. 50,000 வழங்க வேண்டும் என்று மார்க் சஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி கோரிக்கை விடுத்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

பாலபாரதி:

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கோயில் கட்ட தற்போது ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தத் தொகையில் கோயில் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தத் தொகையை உயர்த்தி ரூ. 50,000 வழங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

தா. மலரவன் (அதிமுக):

கோவை மக்களின் காவல் தெய்வமான அருள்மிகு கோணியம்மன் கோயிலில் ராஜ கோபுரம் கட்ட 2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் கோபுரம் கட்ட திமுக அரசு மீண்டும் அடிக்கல் நாட்டியுள்ளது. கோபுரம் கட்டும் பணி எப்போது முடிக்கப்படும்?

கே.ஆர். பெரியகருப்பன்:

கோவை கோணியம்மன் கோயிலில், பழைய ராஜகோபுரம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. அஸ்திவாரப் பணிகள் முடிந்து, தரைமட்டம் வரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதுவரை 15 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தா. மலரவன்:

மருதமலை முருகன் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி மந்தமாக உள்ளது. அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளன.

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

யாருடைய ஆட்சியில் அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்பட்டது என்பதை மன சாட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.

சென்னைக்குப் புதிதாக 5 சுற்றுலா பஸ்

சென்னை, ஏப். 16: சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சென்னையில் புதிதாக ஐந்து சுற்றுலா பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இதுகுறித்து பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம்:

விடியல் சேகர் (காங்கிரஸ்):

சென்னை மாநகரில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்க்க வசதி யாக சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வரை சுற்றுலா பஸ்களை இயக்கினால் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இதுபோன்ற திட்டம் அரசிடம் உள்ளதா?

கே.என். நேரு:

கோவை போக் குவரத்து கழகத்தின் சார்பில் ஊட்டியில், முழுவதும் கண்ணாடி இழைகளால் வடிவமைக்கப் பட்ட சுற்றுலா பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர புதிதாக ஐந்து சுற்றுலா பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

சி. துரைராஜ் (அதிமுக):

தேனி மாவட்டம் வருசநாடு மயிலாடும் பாறையிலிருந்து மதுரை மாவட்டம் மள்ளப்புரம், ஏழுமலை வழியாக உசிலம்பட்டிக்கு மலைச் சாலையில் பஸ்கள் இயக்கப்படுமா? இந்த சாலையில் கடந்த ஆட்சியில் சோதனை ஒட்டமாக பஸ் இயக்கப்பட்டது. ஆனால் சாலைகள் குறுகலாக இருப்பதால் பெரிய பஸ்கள் இயக்க முடியவில்லை. எனவே அந்த மலைப் பகுதிகளுக்கு ஏற்றாற்போல், சிறிய பஸ்களை இயக்க அரசு முன் வருமா?

கே.என். நேரு:

அப்பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் அங்கு சிறிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரை, திருச்சிக்கு ஐ.டி. பார்க் எப்போது?

சென்னை, ஏப். 16: மதுரை, திருச் சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார். பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

நன்மாறன் (மார்க்சிஸ்ட்):

மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, பல மாவட்டங்களுக்கும் அறிவித்தீர்கள். ஆனால் அங்கெல்லாம் பூங் காக்கள் மணம் பரப்பத் தொடங்கிவிட்டன. நான் கடந்த முறை கேட்டபோது, மதுரையில் விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவித்தீர்கள். அது எப்போது நடைபெறும்?

முதல்வர் கருணாநிதி:

திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எல்காட் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதில் கோவை, சேலம், திருநெல்வேலி பூங்காங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க விரைவான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் சில வாரங்களில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.

அப்பாவு (திமுக):

ராதாபுரத்தில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?

முதல்வர் கருணாநிதி:

தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப் புகளை ஆராய்ந்து கண்டறிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து பல திட்டங்களை அரசுக்கு தந்திருக்கிறார்கள். அதில் ஒரு திட்டமான நாங்குனேரி திட்டத்தை நிறை வேற்ற கடந்த வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல செழிப்பானத் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும்.

வை. சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தைக் காரணம் காட்டி எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படுவதில்லை. எனவே ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிறார்கள். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் அதி கமாக உள்ளன. சாலை வசதியும், விமான வசதியும் உள்ளன. எனவே தஞ்சையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கும் பணி முடிந்தவுடன் தஞ்சையில் அமைக்கப்படும்.

ஏ.கே. போஸ் (அதிமுக):

மதுரையில் எங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். இலந்தைக்குளம் என்ற இடத்திலா அல்லது காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலா?

முதல்வர் கருணாநிதி:

இலந்தைக்குளம் பகுதியில் அமைக்க ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறுப்பினர் ஏ.கே.போஸýக்கு எந்தப் பகுதியில் என்று குறிப்பிட்டு விழா அழைப்பிதழ் அனுப்பப்படும். தவறாமல் அவர் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதி ரூ.26 ஆயிரம் கோடியாக உயரும்

சென்னை, ஏப். 16: 2007-2008-ம் ஆண்டில் மொத்த மென்பொருள் ஏற்றுமதி ரூ.26,000 கோடியாக உயரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:

ரங்கநாதன் (திமுக):

2007-2008-ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி, வர்த்தகம் மூலமாக தமிழக அரசுக்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது?

முதல்வர் கருணாநிதி:

2005-2006-ம் ஆண்டில் ரூ. 14,400 கோடிக்கும், 2006-2007-ம் ஆண்டில் ரூ. 21,700 கோடிக்கும் மென்பொருள் ஏற்றுமதி நடந்தது. 2007-2008-ம் ஆண்டு மென்பொருள் ஏற்றுமதி ரூ. 26,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி. செங்குட்டுவன் (திமுக):

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக ல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

முதல்வர் கருணாநிதி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் விசுவநாதபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க 172.19 ஏக்கர் நிலம், "எல்காட்' நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு உத்தேசித்துள்ளது. அதற்காக எல்காட் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள் ளது. இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க, எல்காட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

டி. செங்குட்டுவன்:

கடந்த பிப் ரவரி 26-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சித் தலைவர் அலுவலகத் திறப்பு விழாவில், ஓசூர் விசுவநாதபுரத்தில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.சுமார் 200 ஏக்கர் நிலம் அரசிடம் இருப்பதால் அந்த இடத்தில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசு முன்வருமா?

முதல்வர் கருணைநிதி:

இப் போது ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளேன். செங்குட்டுவன் இன்னொரு பூங்காவுக்கு ஆசைப்படுகிறார். அது பற்றி பிறகு பரிசீலிக்கப்படும்.

டாக்டர் காயத்ரிதேவி (காங்கிரஸ்):

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகரித்து வருவ தால் மக்களின் பழக்க வழக்கங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. வீட்டு வாடகை அதிகரித்து வருகிறது. ஏழைகள் சென்னை போன்ற நகரங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை இரண்டாம், மூன்றாம் நிலை நகராட்சிகளின் அருகில் அமைக்க அரசு முன்வருமா?

முதல்வர் கருணாநிதி:

இது தொழில் வளர்ச்சிக்கு உரிய கேள்வி அல்ல. பரிசீலனைக்கு உரிய கேள்வி.

தில்லியில் நேர்முக தேர்வுக்குச் செல்ல தமிழர்களுக்கு சலுகை

சென்னை, ஏப். 16: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்காக தில்லி செல்லும் மாணவர்களுக்கு, தில்லி தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

சலுகை கட்டணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் தங்கி வருகின்ற னர். இந்த ஆண்டு தமிழ்நாடு இல்லத்தில் 17 பெண்கள் உள் பட 91 பேர் தங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வை எதிர் கொள்ள முன்னாள் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இல்லத்தில் இந்த ஆண்டு மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: விசாரிக்க நீதிபதி நியமனம்

சென்னை, ஏப். 16: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசியை உளவுத்துறை ஒட்டுக் கேட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) இந்தப் பிரச்னையை பேரவையில் எழுப்பின.

இது குறித்து பேரவையில் நடந்த விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர், "தொலைபேசி ஒட்டுக் கேட்டது பற்றி விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.

இந்த கமிஷன் மூன்று மாதத்துக்குள் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக 2 - வது நாளாக வெளிநடப்பு

பேரவையிலிருந்து அதிமுக இரண்டாவது நாளாக புதன்கிழமை வெளிநடப்பு செய்தது.அரசு உயரதிகாரிகளின் தொலைபேசியை உளவுத் துறை ஒட்டுக் கேட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை பேரவையில் கிளப்பின. இந்தப் பிரச்னை தொடர்பாக, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் கருணாநிதி பேசும்போது இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோ. அரி, வி.பி. கலைராஜன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, சி.டியை உயர்த்திக் காட்டி தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து பேச முற்பட்டார்.

இதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் ""இந்தப் பிரச்னைக்கு முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமையே பதிலளித்து விட்டார். ஆதாரம் இருந்தால் அதனை விசாரணை கமிஷ னிடம் கொடுங்கள்'' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பேரவைக்கு மீண்டும் திரும்பி வந்தனர்.

அதிகத் தொகை கேட்கும் ஒப்பந்ததாரர்கள்

சென்னை, ஏப். 16: அரசின் திட்டங்களை நிறைவேற்ற, நிர்ணயித்த தொகையைவிட அதிகத் தொகையை கேட்டு ஒப்பந்ததாரர்கள் அரசை நிர்ப்பந்தம் செய்வதாக பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் குற்றம் சாட்டினார். பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாடசித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

அரசு மிகப்பெரிய திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தான் பணிகளை எடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு தனிக் குழுவை ஏற்ப டுத்திக் கொண்டு அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகத் தொகை கேட்டு அரசை நிர்பந்தம் செய்து வருகின்றனர். அரசும் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்போடு நின்று விட்டது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதற்காக ஒப்பந்ததாரர்க ளின் கோரிக்கைக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு மாற்றுத் திட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதனை அரசு செயல் படுத்த வேண்டும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்துள்ள இரண்டாவது முழுமைத் திட்டத்தில் குறைபாடுகள் அதிகமாக உள்ளன. மக்கள் பிரதிநிதிகள், வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இரண்டாவது முழுமைத் திட்டத்தை வெளியிட வேண்டும்.

அமைச்சர் பரிதி இளம் வழுதி:

ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் கருத்துக் கேட்ட பிறகே இரண்டாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் பாமக பிர முகர்களும் கலந்து கொண்டனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரண்டாவது முழுமைத் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்துள்ளது. எனவே தயவு செய்து அதனை வரவிடுங்கள். சுய உதவிக் குழுக்கள் எல்லாம் கந்து வட்டி குழுக்களாக மாறி வருகின்றன. இதனை அரசு தடுக்க வேண்டும் என்றார் வேல்முருகன்.