Friday, April 25, 2008

குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது: முதல்வர்

சென்னை, ஏப். 24: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் இறந்த குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இறந்த நான்கு குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

ஏதும் அறியாத இளம் குழந்தைகள் மரணத்தைத் தழுவியிருப்பது உச்சகட்ட சோகமாகும். வழக்கத்துக்கு மாறாக நாமே கொன்று விட்டதைப் போன்று இந்த குழந்தைகளின் சாவு அமைந்து விட்டது. இறந்த குழந்தைகள் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா, லோகேஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 12 லட்சம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

முன்னதாக இந்தப் பிரச்னை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி வட்டம் கட்ச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் பென்னலூர்பேட்டை கிராமத்தில் ஏழுமலை மகள் நந்தினி, வள்ளிமுத்துவின் மகள் பூஜா, மோகனின் மகள் மோகனப்பிரியா ஆகிய மூன்று குழந்தைகளும், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் வெங்கடாபுரம் கிராமத்தில் குப்பையாவின் மகன் லோகேஷ் என்ற குழந்தையும் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டதால் ஏற்பட்ட அலர்ஜியால் இறந்துள்ளனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் நான் அங்கு சென்று இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். குழந்தைகளின் மரணம் குறித்து ஆய்வு செய்ய "விரைந்து செயலாற்றும் குழு' அமைக்கப்பட்டது.

மத்தியக்குழு வருகை:

குழந்தைகளுக்கு போடப் பட்ட தடுப்பு மருந்து, கலக்கும் திரவம் ஆகியவை ஆய்வு செய்வதற்காக இமாசல பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆய்வுக்குழு விரைவில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 276 குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமான ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதன் கிழமை (ஏப். 23) தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இந்த சம்பவத்தினால் தட்டம்மை தடுப்பூசி போடுவது தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியாளர்கள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட 5 குழந்தைகள் பயத்தின் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அந்த 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே இல்லையா?

சென்னை, ஏப். 24: தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில்லையா? என்று சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். இது குறித்து பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் பிரசித்தி பெற்ற உரையாற்றிய பிறகு 1897-ல் சென்னையில் தற்போது விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தில் அவர் 10 நாட்கள் தங்கியிருந்தார். விவேகானந்தர் இல்லத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். உலகமே வியந்து பார்க்கின்ற, பல நூற்றாண்டாக உள்ள அந்த இல்லத்துக்கான குத்தகை 2010 வரை இருக்கிறது. ஆனால் அந்த இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியதாகவும், கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வந்துள்ளன. செம்மொழி மையம் அமைக்க வேறு இடமே கிடைக்கவில் லையா? விவேகானந்தர் இல்லத்தை அதே இடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

நல்ல திட்டங்கள் வரும்போது அதற்கு சிலர் தடையாக இருக்கிறார்கள். விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவுச் சின்னம் உள்ளது. அவர் நினைவாக கல்லூரிகள் உள்ளன. அதனால் விவேகானந்தர் இல்லத்தில் தாற்காலிகமாக தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கலாம். செம்மொழி மையம் சென்னை நகரின் மையத்தில் அமைவதுதான் நல்லது.

கி. ஆறுமுகம் (பாமக):

விவேகானந்தர் தியானம் செய்த இடத்தைத் தவிர அந்த வளாகத்தில் உள்ள மற்ற இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைக்கலாம்.

கம்பம் ராமகிருஷ்ணன் (மதிமுக):

ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்ண மடத்தை புதுப்பிக்க அந்த மாநில அரசு ரூ. 21 கோடி ஒதுக்கியுள்ளது. விவேகானந்தர் இல்லத்தை பழைய இடத்திலேயே செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.

செல்வம் (விடுதலைச் சிறுத்தைகள்):

ராமகிருஷ்ண மடத்துக்கு சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் என்று பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. அங்கு அவர்கள் விவேகானந்தர் பற்றிய கண்காட்சியை வைத்துக் கொள்ளலாம். விவேகானந்தர் இல்லத்தில் தமிழ் செம்மொழி மையம் அமைப்பதுதான் சரியானது.

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயலவில்லை

சென்னை, ஏப். 24: விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி செய்ய வில்லை என்று முதல்வர் கருணாநிதி மறுத்தார். தமிழ் செம்மொழி மையம் தாற்கா லிகமாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய தமிழக அரசு நிர்பந்தம் செய்வதாக செய்திகள் வெளியாயின. அரசின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீúஸô, கடிதமோ எழுதவில்லை. விவேகானந்தர் இல்லத்தை இடிப்பதாகவோ அல்லது புதிய இடத்துக்கு மாற்றுவதாகவோ எந்தப் பிரச்னையும் எழவில்லை.

சாமியார்களிடம் மோதவிடுவதா?

அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிய வில்லை. பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிறபோது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ள வேண்டும்? தமிழ் செம்மொழி மையத்துக்கு தாற்காலிகமாக இடம் தேடியபோது, ஏதேதோ கதை கட்டி, அது பலிக்காத காரணத்தால் எங்களை சாமியார்களுடன் மோதவிடுவதற்காக சில காரி யங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சாமியார்களிடம் மோதவிட்டாலும், மாமியார்களிடம் மோதவிட்டாலும் நாங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை.

மூட நம்பிக்கைகளை சாய்த்தவர்:

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தியவர். புகை பிடித்தவர். மனம் சுத்தமாக இருந்தால் இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கத்தோடு செயல்பட்டவர். கட்டடத்தை எடுக்கப் போவதில்லை என்றபோதிலும் விவேகானந்தர் குறித்து எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக இடம் கொடுத்தோம். அப்படிப்பட்ட விவேகானந்தரின் பெயரால் இருக்கிற மண்டபத்தை இடிக்க யாரும் விரும்பவில்லை. நினைக்கவும் இல்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.

ரூ. ஆயிரம் குத்தகை:

897-ம் ஆண்டில் 9 நாட்கள் விவேகானந்தர் தங்கி சொற்பொழிவுகள் நிகழ்த்திய இடம் என்பதால், அதன் நினைவாக அந்த இல்லத்தை சென்னை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்குமாறு மடத்தின் தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி 27,546 சதுர அடி பரப்ப ளவு கொண்ட அந்த இடம் 1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, சில நிபந் தனைகளுடன் ராமகிருஷ்ண மடத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ. ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு, விவேகானந்தர் இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி, அந்த இல்லத்தின் முன்பு உள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை குத்தகைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியது.

அதையும் திமுக அரசு பரிசீலனை செய்து 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மூன்று ஆண்டு குத்தகைக்கு விட்டது. இந்த இல்லத்தை 30 ஆண்டு குத்த கைக்குத் தர வேண்டும் என்று ராமகிருஷ்ண மடம் கோரிக்கை வைத்தபோது "அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும்' என்றேன். விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக்கும் மேல் என்பதால் சலுகை குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டுகளுக்கு 2000-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி குத்தகைக்கு விடப்பட்டது.

சாதுக்கள் சவால் விடக் கூடாது:

"அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்; முறைப்படிதான் நடக்கிறோம்' என்று அந்த மடத்தின் பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கு எல்லாம் பயப்படவில்லை. சாதுக்கள் சவால் விடுகிற அளவுக்கு வரக்கூடாது. அது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் கொள்கைக்கு விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? குமரி முனையில் அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அû மத்து , இங்கே விவேகôனந்தர் மண்டபத்தை போஷித்து பாதுகாத்து வருகிற அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல. சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

"பாலாறு இல்லத்தில்' செம்மொழி மையம்:

தமிழ் செம்மொழி மையம், தாற்காலிகமாக அதே காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.