Friday, May 9, 2008

முதலிடம் பெற்ற ராஜேஷ்குமாருக்கு பாமக எம்.எல்.ஏ. பரிசு

சென்னை, மே 9: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற எம். ராஜேஷ்குமாருக்கு தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குவதாக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம் (பாமக) அறிவித்தார்.

பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், ""பிளஸ் 2 தேர்வில் எனது செங்கல்பட்டு தொகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நி லைப்பள்ளி மாணவர் எம்.ராஜேஷ்குமார் 1200க்கு 1,182 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு எனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குகிறேன்'' என்றார்.

வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி: சட்ட முன்வடிவு தாக்கல்

சென்னை, மே 9: வேலூர், தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட் சிகளாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட முன்வடிவுகள் பேரவை யில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.அவற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

வேலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று, ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தூத் துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழகம் ஆயுதச் சந்தையாக மாறிவிட்டது

சென்னை, மே 9: தி.மு.க. ஆட் சியில் தமிழகம் ஆயுதச் சந் தையாக மாறிவிட்டது என்று அ.தி.மு.க.எம்.எல்.ஏ. சேகர்பாபு குற்றம் சாட்டினார்.சட்டப் பேரவையில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற காவல் - தீயணைப்பு - மதுவி லக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:

தி.மு.க. ஆட்சியில் தமிழ கம் ஆயுதச் சந்தையாக மாறி விட்டது. கடந்த நான்கு மாதங்களில் திருட்டு, கொலைச் சம்பவங்கள் அதிக ரித்துள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலை யத்தில் துப்பாக்கிகள் திருட் டுப் போய் உள்ளன.அ.தி.மு.க. ஆட்சியில் குற் றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டனர்.தற்போது சமூக விரோதிகள் மீது எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படுவதில்லை.

தற்போது 47 ஐ.பி.எஸ்.அதிகாரிகளின் பணியிடங் கள் காலியாக உள்ளன. இப்ப டிப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப் பாற்ற முடியும்? சென்னை மாநகரில் மட் டும் கடந்த நான்கு மாதங்க ளில் 10 கொலைகளும், 18 பெரிய திருட்டுகளும், 108 சிறிய திருட்டுகளும் நடந் துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசா ரிக்க கமிஷன் அமைக்கப்பட் டுள்ளதாக முதல்வர் அறிவித் தார். ஆனால் அது இன்ன மும் அரசு இதழில் வெளியி டப்படவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.விசாரணை குறிப்பிட்ட திசையில்தான் செல்ல வேண் டும் என்று அரசு அறிவுறுத்து வது போல இந்த சம்பவம் உள்ளது என்றார் சேகர் பாபு.

"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்'


"அரசியல்வாதிகள் - சமூக விரோதிகள் - போலீஸ் உறவை துண்டிக்க வேண்டும்' சென்னை, மே 9: அரசியல்வாதி கள், காவல் துறையினர், சமூக விரோதிகள் ஆகியோருக்கு இடையே உள்ள உறவை முற்றி லும் துண்டிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா (படம்) தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற காவல் - தீய ணைப்பு - மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:

அரசியல்வாதிகள், காவல் துறை, சமூக விரோதிகள் ஆகி யோருக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பால் குற்றங் கள் அதிகரித்து வருகின்றன.எனவே இந்தத் தொடர்பை முற்றி லும் துண்டிக்க வேண்டும்.குற்றவாளிகளை மட்டுமே போலீஸôர் கைது செய்ய வேண் டும். மனைவி, தாய் போன்ற குற்ற வாளியின் குடும்பப் பெண்களை கைது செய்யக் கூடாது. பெண் களை இரவில் கைது செய்யாமல் பகலில் கைது செய்து மாலைக் குள் விசாரணை நடத்த வேண் டும்.வரதட்சணை வழக்குகளை மனித உரிமை ஆணையம் மூலம் விசாரிக்க வேண்டும்.

தங்கத்தின் விலையைவிட நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. நில மோசடி செய் பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுக ளில் அதிகாரப்பூர்வமற்ற முறை யில் பல காவலர்கள் வேலை செய் கின்றனர். இதனால் காவல் துறை பணிகள் பாதிக்கப்படுகின்றன.இது தடுக்கப்பட வேண்டும்.போலீஸ் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் அளவை அதிகப்படுத்த வேண் டும் என்றார் டி. யசோதா.

ஜி.கே. மணி (பாமக):

காவல் துறை தன்னாட்சி பெற்ற அமைப் பாக யாருடைய தலையீடும் இல் லாமல் இயங்க வேண்டும்.தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கி திருட்டுபோன சம்ப வத்தில் காவலர்களே சம்பந்தப் பட்டுள்ளனர். ஆனால் இதற்காக அப்பாவி பாமகவினர் குடும்பங் களை போலீஸôர் அடித்து துன் புறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் குடியிருப்பில் பரிமளா என்ற பெண் பொறியாளர் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கொலை செய் யப்பட்டார்.ஆனால் இதனை தற்கொலை என்று போலீஸôர் கூறுகின்ற னர். இது குறித்து தீவிர விசா ரணை நடத்த வேண்டும்.

வீடுகளில் சுற்றுலாப் பயணி களை தங்க வைக்கலாம் என்ற சுற் றுலா துறை அமைச்சரின் அறி விப்பு பல்வேறு முறைகேடுக ளுக்கு வழிவகுக்கும். என்-கவுன் டர் சாவுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

நெருங்கி வருவது யார்? பேரவையில் ருசிகரம்

சென்னை, மே 9: நெருங்கி வரு வது யார் என்பது தொடர் பாக அதிமுக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே ருசிகர விவாதம் நடைபெற் றது.சட்டப்பேரவையில் வியா ழக்கிழமை நடைபெற்ற சுற் றுலா - பத்திரப் பதிவு - செய்தி ஆகிய துறைகளுக் கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எஸ்.வி. சேகர், ""சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடல் ஊன முற்றோர்களாக அறிவிக்க வேண்டும்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக் டர் இ.எஸ்.எஸ். ராமன், ""இளம் சர்க்கரை நோயாளி கள் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்கள். எனவே எஸ்.வி. சேகரின் கோரிக் கையை நானும் ஆதரிக்கி றேன்'' என்றார்.அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், ""காங்கிரஸ் எம்.எல்.ஏ.இ.எஸ்.எஸ். ராமன் எங்க ளோடு நெருங்கி வருவதற்கு நன்றி என்றார்.''

அப்போது குறுக்கிட்ட சட் டப்பேரவை காங்கிரஸ் தலை வர் டி. சுதர்சனம், ""எஸ்.வி.சேகர்தான் எங்களோடு நெருங்கி வருகிறார்'' என்றார்.

"அரசு ஊழியர்களுக்கு கைத்தறி கட்டாயம்'

சென்னை, மே 7: அரசு ஊழி யர்கள் அனைவரும் கைத்தறி துணி அணிவதை கட்டாய மாக்க வேண்டும் என்று காங் கிரஸ் எம்.எல்.ஏ.கே.எஸ்.கே. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன் கிழமை நடைபெற்ற கைத்தறி, கதர், சிறுதொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

கேரளத்தைப் போல தமிழகத்திலும் அரசு ஊழியர் கள் அனைவரும் பணியின் போது கைத்தறி அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தர விட வேண்டும்.கைத்தறி துணி வாங்க, பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மூன்று முட்டை வழங்குவதுபோல மூன்று சீருடை வழங்க வேண்டும்.மதுரை மாநகரில் 50 அடி உயரத்துக்கு மேல் கட்டடம் கட் டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

அதனை தளர்த்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியே பெரிய கட்டடங் கள் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை வளர்ச்சி அடைந்த நகரமாக மாறும். மதுரையில் அனுமதி பெறாமல் கட்டப் பட்ட 25 ஆயிரம் கட்டடங் கள் உள்ளன. மதுரைக்கு என தனியாக அரசாணை பிறப் பித்து இந்தக் கட்டடங்களை வரையறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அரசுக்கு ரூ. 25 கோடி வருமா னம் கிடைக்கும்.

சாதி சான்றிதழ் கிடைக்கா மல் காட்டுநாய்க்கன் சமுதாயத்தினர் அவ திப்படுகின்றனர்.அவர்களுக்கு சான்றி தழ் கிடைக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜேந்தி ரன்.ஜி. லதா (மார்க்சிஸ்ட்):ஆன் லைன் மூலம் முன்பேர வணி கத்தில் ஈடுபடுவதால் இரும் புத் தாதுவின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. இத னால் சிறிய தொழிற்சாலை கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.வெளிநாடுகளை நம்பியி ருப்பதால் நெசவுத் தொழி லுக்கு தேவையான நூலின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது.

இதனால் கைத்தறி நெசவுத் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 18 நூற் பாலைகளில் 13 நூற்பாலை கள் மூடப்பட்டுள்ளன.அதில் ஐந்து நூற்பாலை களை அரசு சீரமைக்கும் என்று 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி பேரவை யில் அமைச்சர் ராஜா அறி வித்தார்.ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. பீடி, தீப் பெட்டி, பட்டாசுத் தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு வரிச்ச லுகை அளிக்க வேண்டும் என்றார் லதா.

பெண் கருக்கொலை தடுப்பு வாசகத்துக்கு பரிசு

சென்னை, மே 7: பெண் கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விளம்பர வாசகங்களை தேரந் தெடுப்பதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு புதன்கி ழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண் சிசுக்கொலை, கருக்கொலை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி, துண்டுப் பிரசுரம், விளம்ப ரப் பலகைகள் மூலம் விளம்பரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள் ளது.இந்த விளம்பரங்களில் இடம்பெற, சிறந்த வாசகங்கள் பொதுமக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் சிறந்த வாசகங்க ளுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ. 500-ம் வழங்கப்படும்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டில் பெண் குழந் தைகள் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 974 ஆகவும், 1981-ல் 967 ஆகவும், 1991-ல் 948 என படிப்படி யாகக் குறைந்து 2001 கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 942 ஆக உள் ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு விகி தம் குறைந்து வருவது வருங்கால சமு தாயத்தை வெகுவாகப் பாதிக்கும் என் பதால் பெண் சிசுக்கொலை, கருக் கொலையை தடுக்க நிறுத்த அரசு முனைப்புடன் உள்ளது.கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனை 1994-ம் ஆண்டு மத்திய அர சால் தடை செய்யப்பட்டது.

ஆனா லும் பெண் சிசுக்கொலை, கருக் கொலை, பெண்கள் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. எனவே மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்ய அரசு முடிவு செய் துள்ளது.

போட்டிக்கான விளம்பர வாசகங் களை மே 30-ம் தேதி வரை அனுப்ப லாம். பரிசு பெற்றவர்களுக்கு அதன் விவரம் கடிதம் மூலம் அனுப்பி வைக் கப்படும். விளம்பர வாசகங்கள் தனியாக முத் திரையிடப்பட்ட உறைகளில் ""பெண் கருக்கொலை தடுப்புப் போட்டி மே 2008'' எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி கள் துறை (நிர்வாகப் பிரிவு 7), சென்னை -6.

மேலும் விவரங்களுக்கு:

044-2432 1835

கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது எப்போது?

சென்னை, மே 7: நெசவாளர்களுக் காக யாருடைய ஆட்சியில் கஞ் சித் தொட்டி திறக்கப்பட்டது என்பது குறித்து பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கைத்தறி - கதர் - சிறு தொழில் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி யல் சேகர், ""நெசவாளர்களுக்கு கடந்த கால ஆட்சியில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது'' என்றார்.

அதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது பேசிய சட்டப் பேரவை அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன், ""தற் போதைய தி.மு.க. ஆட்சியிலும் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.கஞ்சித் தொட்டி திறக்கப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. கோ.அரி போன்றவர் கள் கைது செய்யப்பட்டனர்'' என் றார்.

அது போல தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ. சுப்பிரமணியம் பேசும் போது குறுக்கிட்ட செங்கோட்டையன், ""1996-2001 திமுக ஆட்சியில் நெச வாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ. 40 கோடி நிலுவைத் தொகை 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப் பட்டது'' என்றார்.

அப்போது கதர்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குறுக் கிட்டு, ""கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் நெசவாளர்களுக்கு ரூ. 25 கோடி நிலுவைத் தொகை வழங் கப்படாமல் இருந்தது. அதில், ரூ. 12.5 கோடி தற்போது வழங்கப் பட்டுள்ளது'' என்றார்.

கல்வி அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை

சென்னை, மே 6: போலி கையெ ழுத்து போட்டு ஒன்பது ஆசிரி யர்களை இட மாற்றம் செய்த உதவி கல்வி அதிகாரி உள் ளிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல் வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.பேரவையில் செவ்வாய்க்கி ழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக):

திண்டுக்கல் மாவட்டம் நத் தம் உதவி தொடக்க அலுவலர் குருசண்முகம், தட்டச்சுப் பணியா ளர் தமிழரசி, டிராவல்ஸ் நிறுவ னம் நடத்தி வரும் திமுக பிரமுகர் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக் கக் கல்வி இயக்குநரின் கையெ ழுத்தை போலியாகப் போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற் றம் செய்துள்ளனர்.அவர்களில் 8 பேர் பணியில் சேர்ந்து விட்டனர். ஒரு ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பு, புதி தாகப் பொறுப்பேற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வ குமார் இந்த மோசடியைக் கண்டு பிடித்துள்ளார்.

இதில் குருசண்முகம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தமி ழரசி, சுரேஷ் குமார் இருவரும் தலைமறைவாகி விட்டதாகப் போலீஸôர் கூறுகின்றனர். இது போன்ற பிரச்னையில் யாரையும் தப்ப விடாமல் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):

உதவி தொடக்க கல்வி அதிகாரி யின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஆசிரியர்கள் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் வேலியே பயிரை மேய்ந்துள்ளது.இது போன்ற சம்பவங்கள் வேறு எங்காவது நடந்துள்ளதா?

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உதவி தொடக்க கல்வி இயக்குந ரின் கையெழுத்தைப் போலியாக போட்டு ஒன்பது ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். ஆசி ரியர்கள் இடமாற்ற உத்தரவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர்தான் கையெழுத்து போடு வது வழக்கம்.இதில் உதவி தொடக்க கல்வி இயக்குநரின் கையெழுத்து இருந் ததால் சந்தேகம் வரவே விசா ரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய் யப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்தத் தகவல் கிடைத்ததும் விசா ரணை நடத்தப்பட்டு ஒன்பது ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய் யப்பட்டனர்.இந்த விஷயத்தில் எதையும் மூடி மறைக்க அரசு விரும்ப வில்லை. இதற்குக் காரணமான உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமறைவான தமிழரசி, சுரேஷ் குமார் ஆகியோரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட அனைவரின் மீதும் கிரிமி னல் நடவடிக்கை எடுக்கப்படும்.வேறு எங்கும் இதுபோன்ற சம்ப வங்கள் நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள் ளது. இனி இப்படிப்பட்ட சம்ப வங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் தங்கம் தென்னரசு.

உயர்கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்

சென்னை, மே 6: எண்ணிக்கை அதிகரிப்போம் என்று கூறி உயர் கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள் என்று அதி முக எம்.எல்.ஏ. மு. தம்பித்துரை குற்றம் சாட்டினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

2007-ம் ஆண்டு உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் ""தரத்தினை உயர்த்துவோம், எண்ணிக்கையை அதிகரிப்போம்'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் 2008-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் ""எண்ணிக்கையை அதிகரிப்போம், தரத்தினை உயர்த்துவோம்'' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது உயர் கல்வி யின் தரத்தை பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம் உயர் கல்வியின் பொற்காலம். அவ ரது ஆட்சியில்தான் சுயநிதி கல்லூரிகள் அதிகமாக தொடங்கப்பட் டன. முதல்வர் கருணாநிதி சுயநிதி கல்லூரிகளை எதிர்ப்பவர்.

தமிழ கத்தில் தற்போது 1,400 கல்லூரிகள் உள்ளன. அதில் 1,090 கல்லூரி கள் சுயநிதிக் கல்லூரிகள். 108 கல்லூரிகள் மட்டுமே அரசுக் கல்லூரி கள்.லட்சக்கணக்கான தமிழர்கள் இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பணிபுரிகின்றனர். இதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளே கார ணம்.எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எட்டு பல்கலைக்கழகங்களும், ஜெயலலிதா ஆட்சியில் நான்கு பல்கலைக்கழகங்களும் தொடங்கப் பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் 6 அரசு கல்லூரிகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன.

கல்வித் துறையில் அரசியல் தலையீடு இல்லை என்கிறீர்கள்.ஆனால் அரசியல்வாதியான சபாபதி மோகனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்துள்ளீர்கள்.இது எந்த வகையில் நியாயம்? என்றார் தம்பித்துரை.

அமைச்சர் பொன்முடி:

கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட் சியில் 6 அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மூன்று கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அரசு கலைக்கல் லூரிகளில் சுயநிதிப் பிரிவை தொடங்கி அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டது.சபாபதி மோகன் தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் கல்விப் பணிக்கு திரும்பியவர். சட்டப் பேரவை தலைவராக இருந்த பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் துணை வேந்தராக நியமிக்கப்படவில்லையா? மத்திய அமைச்சராக இருந்த சந்திரசேகர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்திருக்கிறார் என்றார் பொன்முடி.

ஒத்துழைப்பு தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

சென்னை, மே 6: தமிழகம் மீண் டும் அமைதிப் பூங்காவாக மலர அனைவ ரும் ஒத்து ழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட தடுப்புச் சுவர் இடிக்கப் பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டுள் ளது. இது குறித்து பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கரு ணாநிதி பேசியதாவது:

ஜாதி மோதல்கள் இல்லாமல் தமிழகம் மீண்டும் அமைதிப் பூங் காவாக மலர அனைவரும் ஒத்து ழைப்பு தர வேண்டும்.மதுரை மாவட்டம் உத்தபுரத் தில் கடந்த சில நாட்களாக உருவா கியுள்ள பிரச்னை குறித்து தமிழ கத்தில் உணர்ச்சி அலைகள் அலைமோதிக் கொண்டிருக்கின் றன. இந்தப் பிரச்னை ஜாதிப் பூச லாக மாறி, மோதல்கள் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட நேரத்தில் பிரச்னை சுமுகமாக முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தரு கிறது.

தடுப்புச் சுவரை அவமானச் சின்னமாகக் கருதி அதை இடிக்க வேண்டும் என்று பெரும்பான் மையான ஒடுக்கப்பட்ட மக்க ளும், சுவரை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர் தரப்பின ரும் கூறினார்கள். இது தொடர் பாக நான் மதுரை மாவட்ட ஆட் சியரிடம் விரிவாகப் பேசினேன்.

ரத்த வெள்ளம்:

அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் சொன்ன தைப்போல 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாக அந்தச் சுவர் கட் டப்பட்டது என்பதை அனைவ ரும் அறிவார்கள். 20 ஆண்டுக ளுக்கு முன்பு ஏதோ ஒரு நாள் மட் டுமல்ல தொடர்கதையாகவே அந் தப் பகுதியில் இதுபோன்ற கலவ ரங்கள், மோதல்கள் அந்தப் பகுதி யில் நடந்து கொண்டே இருக்கின் றன.இதற்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதிகளில் ஏற்பட்ட ரத்த வெள்ளம், குளங்களிலும், ஆறுக ளிலும், வாய்க்கால்களிலும் ஓடிய தும், அதில் தலைகள் மிதந்ததும் சட்டப் பேரவையில் உறுப்பினர்க ளால் சொல்லப்பட்ட செய்தி தான்.

பாதையும், பாதுகாப்பும்:

உத்தபுரத்தில் ஒரு தரப்பினர் பாதை வேண்டும் என்கிறார்கள். மற் றொரு தரப்பினர் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். "பாதை யும் கொடுங்கள், பாதுகாப்பும் கொடுங்கள்' என்று நான் மாவட்ட ஆட்சியரிடம் கூறி னேன். அங்குள்ள நீண்ட சுவரில் பெரிய நிலைவாசல் ஒன்றை தோற்றுவித்து பாதை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்தப் பாதை வழி யாக யார் வேண்டுமானாலும் செல்லலாம்.பாதையும் இருக்கட்டும், பாது காப்புக்கு அந்தச் சுவரும் இருக் கட்டும் என்று அங்கு இரு தரப்பி னரும் சகோதரர்களாக வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உயர் வர்க்கத்தினர் என்று தங் களை நினைத்துக் கொண்டிருக் கும் ஆண்களில் சிலர் நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம் என்று ரேஷன் கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று விட்டதாக செய்தி வந்துள்ளது.அதனை கோபத்தின் அடையா ளம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஜாதி வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் என்று கூற முடியாது.ஆண்கள் மலைப் பகுதிக்கு சென்றாலும் அவர்கள் வீட்டுப் பெண்கள் அங்கேயே இருக்கிறார் கள். யாரும் செல்லவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தகவல் அனுப்பியுள்ளார். அந்த அளவுக் குப் பெண்கள் முன்னேறி இருக்கி றார்கள்.

சில அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று அதிமுக எம்.எல்.ஏ. துரைராஜ் கூறினார். ஒரு சம்பவம் நடந்தால் அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வார்கள்; அதில் தவறு ஏதும் இல்லை. பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு சமத்துவ நிலை ஏற் பட்டதற்காக உத்தபுரத்தை இனி "உத்தமபுரம்' என்று அழைக்கலாம் என்றார்.

அவசரத்துக்கு இலவச ஆம்புலன்ஸ் தொ.பே. "108' சேவை

சென்னை, மே 6: தமிழகத் தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் கட்டண மில்லா தொலைபேசி எண் "108'-ஐக் கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அவசரகால ஆம்பு லன்ஸ் ஊர்தி சேவைத் திட் டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் கரு ணாநிதி முன்னிலையில் மருத்துவ சேவையில் அனுப வம் உள்ள "எம்ரி' நிறுவனத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெ ழுத்தானது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னி லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் மக் கள் நல்வாழ்வுத் துறை சிறப் புச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எம்ரி நிறுவனம் சார்பில் அதன் முதன்மை நிர்வாக அலுவலர் வெங்கட் ஆகி யோர் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டனர்.இதன்படி எம்ரி நிறுவனம் சென்னையில் மத்திய அவசர கால செயல்பாட்டு நிலையம் ஒன்றை அமைத்து அவசர கால சேவையில் ஈடுபடும்.

கட்டணம் இல்லா தொலைபேசி எண் "108' மூலம் 24 மணி நேரமும் இந்த மையத்தை மக் கள் தொடர்பு கொள்ளலாம்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த தேவையான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் பொறுப்பு "எம்ரி' நிறுவ னத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

முதல் கட்டமாக 14 மாவட் டங்களில் 198 ஆம்புலன்ஸ் களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆம்பு லன்ஸில் அவசரகால சிகிச் சையில் தேர்ச்சி பெற்ற பணி யாளரும், ஓட்டுநரும் பணிய மர்த்தப்படுவார்கள். ஆம்பு லன்ஸýக்கு பொது மக்கள் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. இந்த ஆம்பு லன்ûஸ கண்காணிக்க நவீன தொழில் நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை வழங்க மாநில அளவில் தலைமைச் செயலா ளரை தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட் டத்திலும் மாவட்ட ஆட்சி யரை தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்கு தேவையான கட்டடம் கட்ட வும், தொழில்நுட்பக் கருவி கள், தளவாடப் பொருட்கள் வாங்க முதல் ஆண்டில் ரூ.22.89 கோடியையும், நிர்வா கச் செலவினம், ஊதியம், எரி பொருள் செலவு, மருத்துவச் செலவு, பராமரிப்புச் செலவு, காப்பீட்டுச் செலவு, பயிற்சி, விளம்பரம் ஆகியவற்றுக் காக ரூ. 13.13 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை: பாமக

சென்னை, மே 6: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை என்று சட்டப் பேரவை பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல் லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக் கும் மாணவர்களில் 35 சதவீதம் பேர் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடிவதில்லை. நேர்முகத் தேர் வுக்கு செல்லும் மாணவர்களில் 35 சதவீ தம் பேருக்கு வேலை கிடைப்பதில்லை.மொத்தம் 70 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தமிழக கல் லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு முதல் மூன்று ஆண்டு களில் வேலை கிடைப்பதில்லை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. பல்க லைக்கழகத்தில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைப் பதில்லை என்று சென்னை பல்கலைக்க ழக துணைவேந்தர் ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்துள்ளார்.எனவே தமிழகத்தில் உள்ள கல்லூ ரிகளையும், பல்கலைக்கழகங்களை யும் தரம் உயர்த்த வேண்டும்.

ஆந்திரா வைப்போல மாவட்டம் தோறும் உறைவிடப் பள்ளிகளை தொடங்க வேண்டும். லாப நோக்கோடு செயல்ப டும் சுயநிதி கல்லூரிகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மை யினர் நடத்தும் கல்லூரிகளை ஆய்வு செய்ய வேண்டும். உயர் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை கண்டறிந்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது?

சென்னை, மே 6: இந்தி தெரியாமல் நடிகை ஜெயப்பிரதாவிடம் எப்படி பேசுவது? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பெ.சு. விஜயகு மார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதா வது:

இந்தி பாரத மொழி. ஆங்கிலம் பன்னாட்டு மொழி. தமிழகத் தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு தமிழும், ஆங்கிலமும் மட் டும் தெரிந்தால் போதாது. இந்தியும் தெரிய வேண்டும்.இந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். இந்தி என்ன வேம்பா? கசப்பா? அது வும் நம் சகோதரர்கள் பேசும் மொழிதானே. எதிர்கால சமுதாயம் வளர இந்தி அவசியமானது.

ஹேமமாலினியிடம் தமிழில் பேசலாம். ஜெயப்பிரதாவி டம் பேச முடியுமா? அதனால் அனைவரும் இந்தி கற்க வேண் டும்.போக்குவரத்து, டாஸ்மாக், மணல் குவாரிகளை நடத்தும் அரசே அனைத்துக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த வேண்டும்.தனியார் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுக்கான இடத்துக்கு இப் போதே அட்வான்ஸ் புக்கிங் முடிந்து விட்டது. மதிய உணவு, ஹாஸ்டல் ஆகியவற்றை தனியார் கல்லூரிகள் கட்டாயமாக திணிக்கின்றன. இதனை அரசு தடை செய்ய வேண்டும் என்றார் விஜயகுமார்.

பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்

சென்னை, மே 5: கோவை மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகள் மூடப்ப டும் அபாய நிலையில் இருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ. செ.ம.வேலுச்சாமி குற்றம் சாட்டினார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்ப ரேஷன், தேசிய டெக்ஸ்டைல் கார்ப் பரேஷன் உள்பட கோவை மாவட் டத்தில் 3 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பஞ்சாலைகள் உள்ளன.அவற்றில் 30 சதவீத பஞ்சாலைகள் மூடக்கூடிய அபாய நிலையில் உள்ளன. செயற்கையாக ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு, கச்சாப் பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், வங்கி மானியம் கிடைக்காதது போன்றவற்றால் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவை யில் பஞ்சாலைகள், பனியன் தொழிற் சாலைகள், விசைத் தறிகள், பம்பு செட் தொழிற்சாலைகள் போன் றவை நலிவடைந்து வருகின்றன.

2001-ல் ரூ.3,116 கோடியாக இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி அதிமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த வெளிப்புற கட்டமைப்பு, கல்விசார் கட்டமைப்பு, அறிவுத் திறன் கட்ட மைப்பு ஆகியவை உருவாக்கப்பட்ட தாலும் தமிழகம் அமைதிப் பூங்கா வாக இருந்ததாலும் மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தன.

சில குறிப்பிட்ட தொழில்களுக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் என் னென்ன சலுகைகள் வழங்கப்பட் டுள்ளன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்க ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு ஏற்கெனவே உள்ள தொழில்களுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். புதிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டதால் தேர் வுக்கு படிக்கும் மாணவர்கள் மின்சா ரம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

விசைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.நவீன விசைத்தறிக்கான நாடா வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப் பட்டது. பல்லடத்தில் நவீன விசைத் தறி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சி யில் ரூ.4 கோடியே 87 லட்சம் ஒதுக் கப்பட்டது.திருப்பூர் பனியன் தொழிற்சாலை கள் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி செய் தன. மின் தட்டுப்பாடு, டாலர் வீழ்ச்சி, மானியம் இல்லாதது ஆகிய காரணங்களால் இப்போது ரூ.1,500 கோடிக்கு கூட ஏற்றுமதி செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய வளர்ச்சிக்கு புஷ் "அங்கீகாரம்'

சென்னை, மே 5: உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று புஷ் கூறிய கருத்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா அளித்த அங்கீகாரம் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியர்களே காரணம் என்று கூறியதன் மூலம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவின் வளர்ச்சிக்கு அங் கீகாரம் அளித்துள்ளார். ஒரு காலத்தில் அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும் என்பார்கள். இன்று இந்திய ரூபாய்க்கு சளி பிடித்தால் அமெரிக்க டாலருக்கு காய்ச்சல் வருகிறது.மதிய உணவு திட்டத்துக்கு நிதி இல்லையென்றால் பிச்சை எடுக்க வும் தயார் என்றார் காமராஜர்.அதுபோல தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக டாடா போன்ற தொழில் நிறுவனங்களிடம் முதல்வர் கருணாநிதி பிச்சை எடுக்கிறார்.

தினந்தோறும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. தொழில் துறையில் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் பிரச்னையில் ரத்தக் களரி நடந்த சிங்குரூக்கு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான ஸ்வராஜ்பாலை மேற்கு வங்க அரசு அழைத்து வந்தது. ""விவசாயத்தி னால் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது. தொழிற்சாலைகள் அமைத்தால் தான் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா முன்னிலையில் ஸ்வராஜ் பால் பேசியிருக்கிறார்.

ஒரு காலத்தில் டாடா, பிர்லாவுக்கு நெருக்கமாக இருந்தால் ஏழைகள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இன்று டாடாவும், பிர்லாவும் நெருக்கமானவர்கள், அழைத்தால் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்றால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இன்று அர சியலாக்கப்பட்டு வருகிறது. சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலை முடக்கப்பட்டதால் எதிர்காலத்தில் ஒரு ஜாம் ஷெட்பூர் உருவாகப் போகிறது என்ற கனவு கருவிலேயே கலைந்து விட்டது என்றார் .

நெசவாளர்களுக்கு நன்மை செய்தது யார்?

சென்னை, மே 5: நெசவாளர்களுக்கு எந்த அரசு நன்மை செய்தது என்பது தொடர்பாக அதிமுக -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம்:

கோ. அரி (அதிமுக):

பள்ளிப் பட்டு தொகுதியில் பட்டினிச் சாவு ஏற்படும் சூழ்நிலையில் விசைத்தறி நெசவாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீஸôர் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்கு வந்தவர்களின் லாரி கவிழ்ந்து பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இன்று 200 சதவீதம் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெசவாளர்களின் பெரும்பாலான கோரிக்கை கள் ஏற்கப்படவில்லை. அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இ.எஸ்.எஸ். ராமன் (காங்கிரஸ்):

அதிமுக எம்.எல்.ஏ. பேசியதைக் கேட்டதும் எனக்கு "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்கும் அளவுக்குக் கொண்டு சென்றவர்களுக்கு இது பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. நெசவாளர்கள் இலவச மின்சா ரம் கேட்டு போராடியபோது அதிமுக அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. நெசவாளர் பிரச்னைக்காக நான்கைந்து முறை நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக):

நெசவாளர்களின் பிரச்னை குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரி நடுநிலை யோடு கருத்துகளை எடுத்துக் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இ.எஸ்.எஸ். ராமன் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டி ஒரு புதிய பாணியைப் பின்பற்றுகிறார். விலைவாசி உயர்வுக்குக் காரணம் கேட்டால் ""உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து விட்டது'' என்கிறீர்கள். இப்போது விலைவாசி உயர்வுக்கு இந்தியாவே காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):

அமெரிக்க நாடாளுமன்றத் தில் இந்தக் கேள்வியை ஓ. பன்னீர் செல்வம் கேட்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி:

இங்கே கேள்வி கேட்டால் அதனை அமெ ரிக்காவுக்கு "புஷ்' பண்ணக் கூடாது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்:

பள்ளிப்பட்டில் சுமார் 7,500 விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பிரச்னை சமுகமாக முடிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை நெசவாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் இடம் இல்லை: காங்கிரஸ் புகார்

சென்னை, மே 5: எம்.எல்.ஏ.க்களுக்கு ரயிலில் எமர்ஜென்சி கோட்டாவில்கூட இடம் கொடுக்கவில்லை என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் புகார் தெரிவித்தார். பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து பேசியதாவது:

நாகர்கோயிலில் இருந்து சென்னை வர எமர்ஜென்சி கோட்டாவில் விண்ணப்பித்த நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் சட்டப் பேரவை உறுப்பினர்கள் விடுமுறை நாட்களில் தொகுதிக்குச் சென்று மக்கள் பணியாற்ற முடிவதில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் எமர்ஜென்சி கோட்டாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன்:

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் இது குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைப் பார்த்தேன். அவரது கோரிக்கைகள் நியாயமானவை. பேரவையின் சார்பில் இப்பிரச்னை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

பார்வையாளர் மாடத்தில் முதல்வர் குடும்பம்

சென்னை, மே 5: சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதியின் சார்பில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, கருணாநிதியின் சகோதரி மகன் அமிர்தம் உள் ளிட்டோரும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் ஆகியோரும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்ச்சிகளைக் கவனித்தனர்.

ஸ்பிக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

சென்னை, மே 5: ஸ்பிக் உரத் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தனியாரிடம் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலையை பொதுத்துறை நிறுவனமாக தொடங்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக அதிகமான நிலம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண் டும். இதில் அரசின் கொள்கை என்ன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களை அனும திக்க முடியாது என்று ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வா கம் பகிரங்கமாக கூறியுள்ளது. இதனை அரசு அனுமதிப்பது ஏன்? மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாக இரும்பை மூலதனமாகக் கொண்டுள்ள 52,000 சிறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரும்பு விலை உயர்வால் கிரைண்டரின் உற்பத்தி செலவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

30 சதவீதம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளது. பஞ்சாலைகள் கடும் நெருக்கடியில் உள்ளன. பஞ்சு ஓர் அபூர்வ பொருளாக மாறியுள்ளது.அடுத்த ஆண்டுக்கான பருத்திக்கு இப்போதே விலைபேசி முடித்து விட்டார்கள் என்றார் பாலபாரதி.

ராமசாமி (கம்யூனிஸ்ட்):

நான்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நஞ்சை நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளனர். நிலத்தை கையகப்படுத்தும்போது நஞ்சை நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதரமாக இருந்த பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியர்கள் அதிகமாக உண்பவர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். இதனை பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட யாரும் கண்டிக்கவில்லை என்றார்.

ஞானதாஸ் (மதிமுக):

தமிழக அரசின் கவனம் தென்தமிழகத்தின் பக்கம் திரும்ப வேண்டும். பட்டாசு ஏற்றுமதியில் உள்ள தடைகளைப் போக்க வேண்டும். அச்சுத் தொழிலுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அச்சுத் தொழிலின் தலைநகராக சிவகாசியை மாற்ற வேண்டும். குடிசை தீப்பெட்டி தொழிலின் பிரச்னைகளை தீர்க்க உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்ற அரசு கொள்கையை வகுக்க வேண்டும். மதுரை திருமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை உடனே அமைக்க வேண்டும் என்றார்.

அமராவதி கால்வாயில் மே 10 முதல் 18 வரை தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை, மே 5: அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து அவர் தெரிவித்த விவரம்:

அமராவதி பிரதான கால் வாயில் ஆகஸ்டு 1 முதல் ஜன வரி 31 வரை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் நான் கோவை சென்றிருந்தபோது ""கரும்பு காய்கிறது. தென்னைக்கு உயிர்த் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அமராவதி பிரதான கால்வாயில் உடனே தண்ணீர் திறக்க வேண்டும்'' என்று விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, அணையில் தண்ணீர் இருந்தால் தேவைப்படும்போது திறந்து விடலாம் என்றார். அதன்படி அமராவதி பிரதான கால்வாயில் மே 10 முதல் 18-ம் தேதி வரை தினமும் 440 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக திராவிடக் கட்சியா?

சென்னை, மே 5: அதிமுக திராவிடக் கட்சியா? என்பது தொடர்பாக அதிமுக -திமுக உறுப்பினர் களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தக வல் தொழில் நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் குறுக்கிட்டு பேச முயன்றார்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், ""அவர்கள் உலகப் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன வந்தது. அமருங்கள்'' என்றார். ஆனாலும் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் பேச வாய்ப்புக் கேட்க பேரவைத் தலைவர் வாய்ப்பு தந்தார். அப்போது பேசிய கலைராஜன், ""திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலகப் பொருளாதாரமும் தெரியும். பேரவைத் தலைவர் கூறியது எங்கள் மனதை காயப்படுத்துகிறது'' என்றார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு ""அதிமுக திராவிடக் கட்சி அல்ல'' என்றார். அப்போது சட்டப் பேரவை அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன் எழுந்து, ""திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் அதிமுக'' என்றார்.

உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம்

சென்னை, மே 4: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் வீண்பழி சுமத்தி யுள்ளார். இது கண்டிக்கத் தக்கது.அமெரிக்கா போன்ற மேற் கத்திய நாடுகள் தங்களது விவசாய, பொருளாதாரக் கொள்கையை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது திணிக்கின்றன. அதன் விளைவாகத்தான் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவே பற்றாக்குறைக்கு காரணம்:

உற்பத்தி குறைவுதான் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். தொழில் துறையின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காற்றில் கார்பன்-டைஆக்ûஸடு அளவு அதிகரித் துள்ளது. இதனால் தட்ப வெப்ப நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள் ளது. இதனால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மண்ணின் தரத்தை குறைத்து நிலத்தை மலடாக்குகிறது. இதனாலும் உணவு உற்பத்தி குறைகிறது. இதற்கெல்லாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்கா மேற் கொண்ட விவசாய, பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

உலகம் முழுவ தும் 6-ல் ஒரு பங்கு மக்கள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர். இந்தியாவிலும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகின் 40 நாடுகளில் உணவு உற்பத்தியே இல்லை.அந்த நாடுகள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை நம்பியுள்ளன. இதை யெல்லாம் அமெரிக்க அதிபர் புஷ் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

ஹெக்டேருக்கு 20 டன்:

300 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெக்டேருக்கு 20 டன் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆனால் இன்று 3 அல்லது 4 டன்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. நம் நாட்டுக்கென்று பாரம்பரியமான விவசாயக் கொள்கை உள்ளது.விவசாயம் என்பது நம் நாட்டில் தொழில் அல்ல. வாழ்க்கை முறை. நமது பாரம்பரியமான விவசாயக் கொள்கையைப் பின்பற்றி ஹைதராபாதில் ராஜீவ் பிரதாப் என்ற விவசாயி ஒரு மாமரத்தில் 40 ஆயிரம் மாங்கனிகளை உற்பத்தி செய்து சாதனை படைத் துள்ளார். நமது பாரம்பரிய விவசாய முறைகளை வேளாண் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிக ரிக்க முடியவில்லை.

ஆபத்தான விஷயம்:

உணவுப் பற்றாக்குறை மிக வும் ஆபத்தான விஷயம். ஜனநாயகத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் உணவுப் பற்றாக்குறை ஆபத்தை உண்டாக்கும். எனவே மத்திய அரசு தனது விவசாயக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.

பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், அகில இந்தியச் செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மகளிர் இட ஒதுக்கீடு: திடீர் அறிவிப்பு? கருணாநிதி சூசகம்

சென்னை, மே 4: மகளிருக் கான இட ஒதுக்கீடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க.பிரமுகர் இல்ல திருமண விழாவில் அவர் பேசியது:

இன்னும் ஓரிரு நாளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்ற செய்தி வந்துள்ளது. பெண்கள் முன்னேற அவர்களுக்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அந்த ரகசியத்தை அறிந்து கனிமொழி அப்படி பேசினார் என்று நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.

33 சதவீத இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் என்று பெண்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கருணாநிதி பேசியிருப்பது பெண்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.