Sunday, March 30, 2008

ஆங்கில ஆய்வகம் அமைக்க ரூ. 54.75 லட்சம் கூடுதல் நிதி

சென்னை, மார்ச் 29: பள்ளிக ளில் ஆங்கில மொழி ஆய்வ கம் அமைக்க, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ. 54.75 லட்சத்தை கூடுதலாக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வழங்கியுள்ளார்.

திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை தொகுதி யில் இரண்டு பள்ளிகளிலும், தி.நகர் தொகுதியில் நான்கு பள்ளிகளிலும், மயிலாப்பூர் தொகுதியில் ஒரு பள்ளியிலும், ஆலந்தூர் தொகுதியில் 10 பள்ளிகளிலும், தாம்பரம் தொகுதியில் 13 பள்ளிகளிலும் ஆங்கில மொழி ஆய்வகம் அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டி.ஆர். பாலு ரூ.2.40 கோடி வழங்கினார்.

இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று சென்னை மாநக ராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்தார்.அதனை ஏற்று தற்போது, கூடுதலாக ரூ. 54.75 லட்சம் வழங்கியுள் ளார். ரூ. 7.50 லட்சம் வீதம் 32 அரசு பள்ளிகளுக்கு இந்த நிதி வழங் கப்படும்.அரசு பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம் அமைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் எளிதாக வேலை பெற முடியும்.

இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

சென்னை, மார்ச் 29: இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷை தாக்கியவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத் துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களி டம் கூறியதாவது:

இலங்கை திரைப்பட இயக்குநர் பெரிஷ் சில அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய -இலங்கை நல்லுறவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.முதல்வருடன் தங்களுக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சில அமைப்பினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை திரைப்பட இயக்குநரை தாக்கியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தேச விரோதச் செயலாகும்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது.

தேர்தல் ஸ்டண்ட்:

தேர்தல் ஆதாயத்துக்காக ஓகேனக்கல் கர்நாட கவுக்கே சொந்தம் என்று பா.ஜ.க. பிரச்னை கிளப்புகிறது. ஒகேனக் கல் தமிழகத்துக்கு சொந்தமானது. ரேஷன் விநியோகத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்துக் கல்லூரி 32-வது பட்டமளிப்பு விழா

சென்னை, மார்ச் 29: சென்னை பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந் துக் கல்லூரி 32-வது பட்டம ளிப்பு விழா, சனிக்கிழமை நடை பெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற நீதி பதி பி. ஜோதிமணி 327 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை யும், பல்கலைக்கழக அளவில் முத லிடம் பெற்ற மாணவர் உள் ளிட்ட 36 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசையும் வழங்கி னார்.

கருணாநிதியிடம் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆசி

சென்னை, மார்ச் 29: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் கே.எம். ரவி, சனிக்கிழமை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம் மாள், கவிஞர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

பைலட் பயிற்சி பெற...

விமானி ஓட்டியாக விரும்புவோருக் கான 9 மாதப் பயிற்சியை ஃபால்கன் ஃப்ளைட் ஸ்கூல் சென்னையில் அண் மையில் தொடங்கியுள்ளது."பிளஸ் 2' முடித்த, 18 வயது நிரம்பிய வர்கள் இதில் சேரலாம். ஆயத்தப் பயிற்சி சென்னையிலும் களப் பயிற்சி அமெரிக்காவிலும் வழங்கப்படும்.

பள்ளிப் படிப்பில் கணிதம், இயற்பி யல் படித்திருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனையும் மேற் கொள்ள வேண்டும்.போக்குவரத்து, விடுதிக் கட்டணம் உள்பட மொத்தக் கட்ட ணம் ரூ.18 லட்சம்.மேலும் விவரங்களுக்கு: ஃபால்கன் ஃப்ளைட் ஸ்கூல், 5, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. தொலைபேசி: 044-43534312, 43534314.மொபைல்: 9789094141, 9841811880

12 தமிழக மீனவர்கள் இலங்கையில் விடுதலை

சென்னை, மார்ச் 25: இலங்கை கடற்படையினரால் பிடித் துச் செல்லப்பட்ட 12 மீன வர்களையும், அவர்களின் நான்கு படகுகளையும் விடு விக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கன்னியாகு மரி பகுதிக்கு மீனவர்கள் விரைவில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகி றது. இது குறித்து அரசு செவ் வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மார்ச் 7-ம் தேதி, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த 62 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், மார்ச் 10-ம் தேதி 50 மீனவர்கள் விடு விக்கப்பட்டனர்.

விடுவிக்கப் படாமல் இருந்த மீனவர்க ளையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.அதன் பலனாக இலங்கை புட்லம் நீதிமன்ற நீதிபதி டி.ஜி.எஸ்.ஏ. பெரேரா 12 மீனவர்களையும், நான்கு பட குகளையும் விடுவிக்க உத்தர விட்டார்.இதையடுத்து, அவர்கள் விரைவில் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என்று தமி ழக அரசு வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை

சென்னை, மார்ச் 25: சுதந்திரமா கச் செயல்பட முடியவில்லை என்று தமிழ்நாடு பெண் ஊராட் சித் தலைவர்கள் மாவட்ட நிர்வா கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள னர்.இது குறித்து, தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்ட மைப்பின் மாநில நிர்வாகிகள் எஸ். அருள்தேவி, டி. சுகுணாகு மாரி, வசந்தா, செல்வி, சுகன்யா ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்ப டையில் நாங்கள் வெற்றி பெற்றுள் ளோம். ஆனால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் எங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவ தில்லை.முக்கிய கோப்புகளில் கையெ ழுத்திடாமல் துணைத் தலைவர்க ளாக இருக்கும் ஆண்கள் எங் களை அலைக்கழிக்கின்றனர். தட் டிக் கேட்டால் மிரட்டுகின்றனர்.தலித் பெண் தலைவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கிராம சபைக் கூட்டங்களில் என்னென்ன தீர்மானங்கள் நிறை வேற்ற வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை சுதந்திரமாக நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் நினைத் தால் தற்போது, ஊராட்சித் தலை வர்களை பதவி நீக்கம் செய்து விட முடியும். இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும்.ரேசன் கடைகளை மேற்பார் வையிடும் பொறுப்பை கிராம பஞ் சாயத்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஊராட்சி மன்ற பிரதிநி திகளுக்கு மதிப்பூதியமாக குறைந்த பட்சம் மாதம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்றனர்.அரசியல் கட்சிகளிடம் மனு: பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் அதிமுக, காங்கி ரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் அலுவலகங் களுக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆத ரவு தரக் கோரி எம்.எல்.ஏக்களி டம் மனு கொடுத்தனர்.

ஒகேனக்கல் பிரச்னை: பாஜகவுக்கு வாசன் கண்டனம்

சென்னை, மார்ச் 25:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும், கர்நா டக பாஜக தலைவர் எடியூரப்பா வுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள் ளார்.மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றி தழை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார் ஜி.கே.வாசன்.மாநிலங்களவைத் தேர்தல் அதி காரியும், சட்டப் பேரவைச் செயல ருமான மா. செல்வராஜ் அவ ருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

ஒகேனக்கல் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாஜக தலைவர் எடியூரப்பாவின் செயல் கண்டனத்துக்குரியது.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள் ளது.

நேரில் பார்த்தேன்:

கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை யின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெல், உளுந்து போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிக ளுக்கு ஏற்பட்டுள்ள அவலநி லையை நேரில் பார்த்தேன்.

சோனியாவின் கவனத் துக்கு...:

நிவாரணப் பணிக ளில் அமைச்சர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்க ளும் அந்தந்தப் பகுதிகளில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி வரு கின்றனர். தமிழக வெள்ளச் சேதம் குறித்தும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கி ரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து எடுத்துக் கூற இருக்கிறேன்.

மழையால் விவசாயிகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் பற்றி காங் கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் பேசுவார்கள். நிவார ணப் பணிகளில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றார் ஜி.கே. வாசன்.

தண்டோரா அடிக்கும் முறை ரத்து

சென்னை, மார்ச் 25: கிராமங்களில் தண்டோரா அடிக்கும் முறையை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.அரசு அறிவிப்புகள், கோயில் திருவிழா அறிவிப்புகளை தண் டோரா அடித்துச் சொல்லும் முறை கிராமங்களில் உள்ளது.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்து வரும் தண் டோரா முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.

மேலும் இரட்டை தம்ளர் முறை, தீண்டாமை ஒழிப்பு ஆகிய வற்றை முழுமையாக ஒழிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.""2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் தலை மையில் சமூக சீர்திருத்த துறை என்ற புதிய துறை உருவாக்கப் பட்டது. இந்தத் துறைக்கு ஆலோசனை வழங்க பேராசிரியர் நன்னன் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சமூக சீர்திருத்தக் குழுவை அரசு அமைத்தது.

அரசுக்கு பரிந்துரை:

இந்தக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 13-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் தண்டோரா முறை ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டன'' என்றார் சமூக சீர்திருத்தக் குழுவின் உறுப் பினரும், எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார்.

இந்த பரிந்துரைகளின்படி தண்டோரா அடிக்கும் முறையை தடை செய்ய அரசு ஆலோசனை செய்து வருவ தாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக - வுடன் கூட்டணி தொடரும் - ஜெயந்தி நடராஜன்

சென்னை, மார்ச் 24: நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று நம்புவதாக காங்கி ரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பா ளர் ஜெயந்தி நடராஜன் கருத்து தெரிவித்தார்.மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார் பில் நிறுத்தப்பட்ட ஜெயந்தி நடராஜன் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கான சான் றிதழை அவர் தலைமைச் செயலகத்தில் திங்கள்கி ழமை பெற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலரு மான மா.செல்வராஜ் அவருக்கு சான்றிதழை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயந்தி நடராஜன் கூறியது:

காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க இந் திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருவது பற்றி நான் எதுவும் கூற விரும்ப வில்லை. ஜனநாயகத்தில் இது போன்ற பேச்சுகள் நடப்பது சகஜம்.

மன்மோகன்சிங் அரசு முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக உள்ளிட்ட கட்சி கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொடரும் என்று நம்புகிறேன்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற் றியைப் பெரும் என்றார் ஜெயந்தி நடராஜன்.

மாநிலங்களவைத் தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேர வைச் செயலர் கடந்த சில தினங்களுக்கு முன் முறைப்படி அறிவித் தார்.இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த நா.பாலகங்கா, மார்க்சிஸ்ட் கட் சியைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கடந்த வாரம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர். மத்திய மைச்சர் ஜி.கே. வாசன் ஓரிரு தினங்களில் சான்றிதழை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவரம் நகராட்சியைக் கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 24: மாதவரம் நகராட்சியைக் கண் டித்து, புதன்கிழமை (மார்ச் 26) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி யின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

மாதவரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க, அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆனால், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியை திமுக அரசு தாமதப்படுத்தி வருகிறது.மாதவரம் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கூடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.வீட்டுவரியை உயர்த்த மாதவரம் நகராட்சி முடிவு செய்திருப்பதாக வும் செய்திகள் வருகின்றன.

மாதவரம் நகராட்சி நிர்வாகத் தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) காலை 10 மணிக்கு நகராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால்

சென்னை, மார்ச் 23: நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.சென்னை மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை "மாற்றத்தை நோக்கி' என்ற தலைப்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசியதாவது:

அமைச்சர் மு.க.ஸ்டாலின், போகும் இடமெல்லாம் இரண்டு நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பேசி வருகிறார். வசன கர்த்தாவின் மகனான ஸ்டாலினுக்கு, நடிகர்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? யாருக்கு தகுதி உள்ளது என்பதை அப்போது முடிவு செய்வோம்.கனிமொழிக்கு எம்.பி.யாக தகுதியாக இருக்கிறதா என்பதை கரு ணாநிதி பரிசோதனை செய்து பார்த்தாரா? அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. 1

967-க்குப் பிறகு தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை மாற்ற புனிதப் போரை தொடங்கி இருக்கிறோம். இந்தப் புனிதப் போரில் எங்களுக்கு வெற்றி கிடைக் கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2011-ல் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிக ளிலும் வெற்றி பெறுவோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவர் 2 முறை மட்டுமே முதல்வராகவோ, அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ இருக்க முடியும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.எனது குடும்பத்தினர் எக்காரணத்தை முன்னிட்டும் பதவிக்கு வரமாட்டார்கள். இதை கபாலீஸ்வரர் மேல் சத்தியமாகக் கூறுகி றேன் என்றார் சரத்குமார்.

அவைத்தலைவர் என்.முருகன்:

தமிழகத்தில் அவலமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை செய்திகளை படித்து பார்த்தாலே ஆட்சியின் அலங்கோலத்தை தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே தமிழகம் தான் ஊழலில் முத லிடத்தில் உள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். மத்திய அரசின் பட்ஜெட்டில், விவசாயக் கடன் 60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படி செயல்படுத்தப்படும் என் பதைப் பற்றி நிதியமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.

கூட்டத் தில் துணைத் தலைவர் ஏ.நாராயணன், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஊனமுற் றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை, சரத்குமார் வழங்கினார்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னைமைலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறார்அக்கட்சி தலைவர் ஆர். சரத்குமார். உடன் (இடமிருந்து) கட்சிநிர்வாகிகள் என். முருகன், கே.ஜே. நாதன்.

எதற்கெடுத்தாலும் போராடுவதா?

சென்னை, மார்ச் 29: தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பாமக நிறுவனர் ராமதா ஸýக்கு, முதல்வர் கருணாநிதி மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கேள்வி -பதில் வடிவில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவோம் என்று ஒருவர் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்."காலையில் கைது, மாலையில் விடு தலை' என்ற நிலை தொடரும் வரை எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இலவச வீடு கட்டும் திட்டம்:

ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கள் கட்டும் திட்டம் 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தைதான் "இந்திரா வீட்டு வசதி திட்டம்' என்ற பெயரில் மத்திய அரசு விரிவுபடுத்தியது.

சொத்துவரி உயர்வு கட்டாய மில்லை:

மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப் பகுதிகளில் சொத்துவரியை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டுள் ளதை ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் சொத்து வரியை சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குடியி ருப்பு வீடுகளுக்கு 25 சதவீதமும், தொழில் கட்டடங்களுக்கு 100 சதவீத மும், வணிக நிறுவனங்களின் கட்டடங் களுக்கு 150 சதவீதம் வரையும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாட் டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டு மானால் போதிய நிதி தேவை. அதற்கு சொத்து வரியை சீரமைக்க வேண்டி யது அவசியமாகும்.1993-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி யில் குடியிருப்பு வீடுகளுக்கு 100 சதவீத மும், தொழில், வணிக கட்டடங்க ளுக்கு 150 சதவீதத்திலிருந்து 200 சதவீ தம் வரையும் உயர்த்தப்பட்டது.

ஏ.பி. பரதனுக்கு வாழ்த்து:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நான்காவது முறையாக ஏ.பி. பரதன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 82 வயதான அவருக்கு, 84 வயதான நான் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.கோவையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாட்டுக்கான அழைப்பிதழ் கிடைத் தது. மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கி றேன்.

நாட்டிலேயே முதன்முறையாக தமி ழக அரசு அளித்த ரூ. ஒரு கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள் ளது.தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை திறந்து வைத்த நோபல் பரிசு பெற்ற பன்னாட்டு சுற் றுச் சூழல் ஆய்வின் தலைவர் ஆர்.கே.பச்சௌரி வெள்ளிக்கிழமை (மார்ச் 28) என்னை சந்தித்துப் பேசினார் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.

Saturday, March 29, 2008

குடிபோதையில் வேலைக்கு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, மார்ச் 28: குடிபோதை யில் வேலை க்கு வரும் அரசு அதிகாரிகள் மீது ந ட வ டி க் û க எடுக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ கி.ஆறுமுகம் கோரி க்கை விடுத்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை இதுகுறித்து நடந்த விவாதம்:

கி. ஆறுமுகம் (பாமக):

காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் குடிபோதையில் வேலைக்கு வருகின்றனர். எனது தொகுதியில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் குடித்துவிட்டு பணிக்கு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே நடத்த வேண்டும். செய்யூரில் அறிவிக்கப் பட்ட அனல் மின்நிலையத்தை உடனே தொடங்க வேண்டும்.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

செய்யூரில் நிலத்தின் விலை அதிக மாக இருந்தாலும் அங்கு அனல் மின்நிலையம் அமைக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகி றது. ஒரு ஏக்கர் ரூ. 6 லட்சத்துக்கு வாங்கித் தருமாறு கேட்டுள்ளார் கள்.

கி. ஆறுமுகம்:

பிளாஸ்டிக் பொருட்களுக்கு 100 சதவீத தடை விதிக்க வேண்டும். வேலை கேட்டு போராடி வரும் 30,000 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.செங்கல்பட்டுக்கு அறிவிக்கப் பட்ட பாதாளச் சாக்கடை திட் டத்தை உடனே நிறைவேற்ற வேண் டும். செங்கல்பட்டில் சட்டக் கல் லூரி மாணவர்களுக்காக விடுதி கட்ட வேண்டும்.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க அரசு பரிசீலனை

சென்னை, மார்ச் 28: சென்னை மாநகர போக்குவரத்துக் கழ கத்தை இரண்டாகப் பிரிக்க அரசு பரிசீலனை செய்து வருவ தாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரி வித்தார்.பேரவையில் வெள்ளிக்கி ழமை, கேள்வி நேரத்தில் இதை அவர் அறிவித்தார்.

மு.அப்பாவு (திமுக):

திரு நெல்வேலி மாவட்டம் திசை யன் விளையிலிருந்து மன்னார்பு ரம் விலக்கு, தெ. கள்ளிகுளம் வழியாகவும், ஆற்றங்கரை பள் ளிவாசல் வழியாகவும் சென் னைக்கு அரசு விரைவுப் பேருந்து விட வேண்டும்.திருநெல்வேலியைத் தலைமை யிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக்கழகம் அமைக் கப்பட வேண்டும்.

கே.என். நேரு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 17,500 பஸ் கள் ஓடின. இப்போது 19,500 பஸ்கள் ஓடுகின்றன.நிர்வாக வசதிக்காக 20 போக் குவரத்துக் கழகங்கள் 7 ஆக குறைக்கப்பட்டன. தற்போது 2,000 பஸ்களுக்கு ஒரு போக்குவ ரத்துக் கழகம் தொடங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.மதுரை மண்டலத்தில் 3,900 பஸ்களும், சென்னை மண்டலத் தில் 3,100 பஸ்களும் ஒடுகின் றன. சென்னை மண்டலத்தை வடசென்னை, தென்சென்னை என்று பிரிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகி றோம்.
மதுரை மண்டலத்தை யும் பிரிப்பது பற்றி ஆலோசிக் கப்படும்.

எம்.ஆர். சுந்தரம் (காங்):

ஆத் தூரில் இருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.கே.என். நேரு: அரசு விரை வுப் போக்குவரத்துக் கழகத் துக்கு 100 ஏ.சி. பஸ்கள் வாங்கப் பட்டுள்ளன.அவை, இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. அவை வந்ததும் ஆத்தூரில் இருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும் விடுவது பற்றி முடிவு செய்யப்ப டும்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):

சாதாரண கட்டண பஸ்களை நிறுத்திவிட்டு எல்.எஸ்.எஸ்., ஏ.சி. பஸ்களை இயக்கி வருவ தாக எங்களுக்கு செய்திகள் வரு கிறது.

கே.என். நேரு:

சாதாரணக் கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களை எங்கும் நிறுத்த வில்லை. புதிய வழித்தடங்களில் தான் எல்.எஸ்.எஸ்., ஏ.சி. பஸ் கள் இயக்கப்படுகின்றன.சென்னை மாநகரில் ஒடும் 3,100 பஸ்களில் 2,100 பஸ்கள் சாதாரணக் கட்டணத்தில் ஒடிக் கொண்டிருக்கின்றன.

அதிகாரிகளின் துணையோடு அரிசி கடத்தல்

சென்னை, மார்ச் 28: ரேஷன் கடைகளுக்கு வ ரு வ த ற் கு முன்பே, அதி க ô ரி க ளி ன் துணையோடு அரிசி கடத்தப் படுவதாக இந் திய கம்யூ னிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராம சாமி குற்றம் சாட்டினார்.பேரவையில் வெள்ளிக்கிழமை இதுகுறித்து நடந்த விவாதம்:

ராமசாமி (கம்யூனிஸ்ட்):

ரேஷன் கடைகளுக்கு வருவதற்கு முன்பே, அதிகாரிகளின் துணை யோடு அரிசி கடத்தப்படுகிறது.ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வழங்கப் படுவதில்லை. 5 கிலோ பச்சரிசி, 5 கிலோ புழுங் கல் அரிசி என மொத்தம் 10 கிலோ அரிசிதான் வழங்கப்படுகி றது. கேரளம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு வழங் கும் அரிசியின் அளவை மத்திய அரசு குறைத்து உள்ளது. அது போல தமிழகத்துக்கும் குறைக் கப்பட்டுள்ளதா?

அமைச்சர் எ.வ. வேலு:

தமிழ கத்துக்கு கிடைக்க வேண்டிய அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட் டத்துக்கும் நுகர்வோர் வாங்கும் அளவைப் பொருத்து அரிசி விநி யோகிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 93 சதவீதம் பேர் அரிசி வாங்குகின்றனர்.ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் 53 முதல் 63 சத வீதம் பேர் மட்டுமே அரிசி வாங் குகின்றனர்.

அதற்கு தகுந்தாற் போலதான் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஒட்டு மொத்தமாக அரிசியை இருப்பு வைக்க வசதி கள் இல்லை. அதனால் முதலில் 60 சதவீதமும், பிறகு 40 சதவீத மும் இருப்பு வைக்கப்படுகின் றன. முன்பு 20 கிலோ அரிசியை யும் ஒரே தவணையில் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்ற புகார் வந்தது.

அதனால் தான் மக்கள் விருப்பப்படி 5 கிலோ, 10 கிலோ வழங்க அரசு உத்தரவிட்டது. அரிசி கடத்த லில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகி றது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்களும் தரப் பட்டுள்ளன.

கே.ஏ. செங்கோட்டையன் (அதிமுக):

அரிசி கடத்துபவர் கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றீர்கள். இதுவரை குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

எ.வ. வேலு:

இதுவரை ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருசிலர் 1984-ல் இருந்து அரசை ஏமாற்றி அரிசி கடத்தி வருகின்றனர்.கடந்த ஆறு ஆண்டுகளாக அரி சிக் கடத்தலில் ஈடுபட்டு வந்த 13 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் எட்டு பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

ராமசாமி:

இந்தப் பிரச்னை யைச் சமாளிக்க மாதந்தோறும் நுகர்வோர் குறை தீர்க்கும் நாளை அரசு நடத்த வேண்டும்.

ஒகேனக்கல் நீர்மின் திட்டத்துக்கு கர்நாடகம் தடையாக உள்ளது

சென்னை, மார்ச் 28: ஒகேனக்கல் நீர்மின் திட்டத்துக்கு கர்நாடக அரசு தடையாக இருப்பதாக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.பேரவையில் வெள்ளிக்கிழமை, சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவபுண்ணியம் எழுப்பிய கேள்விக் குப் பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசியதாவது:

ஒகேனக்கல் நீர்மின் திட் டத்தை நிறைவேற்றினால் தமிழகத்துக்கு 150 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், கர்நாடகத்துக் கும், தமிழகத்துக்கும் இடையே தண்ணீர் பிரச்னை இருப்பதால் இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது.இரண்டு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் நீர் மின் நிலையத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஷிண்டே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. காவிரி நீர் முழுவதும் கர்நாடகத்துக்கே சொந்தம். எனவே உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எங்களுக்கே வேண்டும் என்று கர்நாடகம் கூறி யது. தமிழகத்தில் கிடைக்கும் மின்சாரத்தைச் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என்றோம். அதற்கு இசையவில்லை. இல்லையென்றால், 60 சதவீதத்தைக் கர்நாடகம் வைத்துக் கொண்டு, 40 சதவீதத்தைத் தமிழ கத்துக்கு அளிக்கலாம் என்று கேட்டுக் கொண் டோம்.

தற்போது, காவரிப் பிரச்னை தீர்க்கப்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கர்நாடகம் கூறு கிறது. அதனால் ஒகேனக்கல் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்றார் ஆர்க்காடு வீராசாமி.

முந்திரி சாப்பிடுவது நல்லதா?

சென்னை, மார்ச் 28: முந்திரி சாப்பிடுவது நல்லதா இல்லையா என்பது குறித்து சட்டப் பேரவை யில் ருசிகர விவாதம் நடைபெற் றது.பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடந்த விவாதம்:

க. ராஜேந்திரன் (அதிமுக):

ஜெயங்கொண்டம் பகுதியில் முந் திரி விளைச்சல் அதிகமாக உள் ளது. எனவே அங்கு முந்திரி தொழிற்சாலையை அரசு அமைக்க வேண்டும்.

அமைச்சர் பொங்கலூர் பழ னிச்சாமி:

ஜெயங்கொண்டம் பகு தியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் தனியார் தொழில் முனைவோர்கள் முந்திரி ஆலை தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு அனைத்து ஆலோச னைகளையும் மாவட்ட தொழிற் பயிற்சி மையம் அளிக்கும்.

வேல்முருகன் (பாமக):

முந்திரி அதிகமாக விலையும் பண்ருட்டி யில் முந்திரி ஆலை அமைக்கப்ப டும் அரசு ஏற்கனவே உறுதியளித் தது. முந்திரி பழத்திலிருந்து ஒயின் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

பொங்கலூர் பழனிச்சாமி:

முந்திரியிலிருந்து ஓயின் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று வேல்முருகன் சொல்வது அவரது கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ளது.

டி. ஜெயக்குமார் (அதிமுக):

ஒரு நாளைக்கு 10 முந்திரி சாப்பிட் டால் ஹெச்.டி.எல். என்ற நல்ல கொழுப்பு உற்பத்தியாகி, எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பு குறையும் என்று சமீபத் திய ஆய்வு கூறுகிறது.முந்திரி சாப்பிட்டால் மலட்டுத் தன்மை ஏற்படாது என்றும் ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக் கிறார்கள். மலட்டுத் தன்மை இல் லாத நிலையை ஏற்படுத்த தமிழ கம் முழுவதும் முந்திரி பயிரிட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ஆர்க்காடு வீராசாமி:

முந்திரி சாப்பிட்டால் நிச்சயமாக கொழுப்பு ஏற்படும். கொழுப்பு அதிகமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே ஜெயக்குமார் மட்டுமல்ல அனைத்து உறுப்பினர்களும் முந் திரி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என்றார்.

தனியார் பஸ்களை அரசு வாடகைக்கு எடுக்குமா?

சென்னை, மார்ச் 27: தனியார்க ளிடம் இருந்து பஸ்களை வாட கைக்கு எடுத்து அரசு பேருந்துக ளாக இயக்க பிறப்பிக்கப் பட்ட அர சாணை இன் னும் நீடிக்கிறது போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப் பேரவையில் தெரிவித் தார்.ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ் களை அரசு விடுவதால், அந்த அர சாணையை தற்போது செயல்ப டுத்த அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடந்த விவாதம்:

கோவை தங்கம் (காங்.):

வால் பாறை மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 6,000 மாணவ, மாணவிகள் தின மும் வால்பாறைக்கு வந்து செல் கின்றனர்.ஆனால் பேருந்து வசதி போது மானதாக இல்லை. எனவே வால் பாறை மலைப் பகுதிகளில் புதி தாக ஐந்து பேருந்துகளை இயக்க வேண்டும்.

அமைச்சர் கே.என். நேரு:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 6,000 புதிய பேருந்துகள் வாங்கப் பட்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில் கூட 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய பேருந்துகள் வாங்கும் போது வால்பாறை பகுதிகளில் ஐந்து பேருந்துகள் இயக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்:

புதிதாக விடப்பட்ட பேருந்து களை நிறுத்த திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இடம் இல்லை. எனவே திருப்பூர் தெற்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

கே.என். நேரு:

திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக் கும் கோரிக்கை உள்ளாட்சித் துறை அமைச்சரின் கவனத்துக் குக் கொண்டுச் செல்லப்படும்.அவரின் அனுமதியோடு புதிய பேருந்து நிலையம் கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்.):

கர்நாடகம் போன்ற மாநிலங்க ளில் தனியாரிடம் இருந்து பஸ் களை வாடகைக்கு எடுத்து அரசு இயக்கி வருகிறது. இதனால் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் பயன் பெறுகின்ற னர். இது போன்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துமா?

கே.என். நேரு:

தனியாரிடம் இருந்து பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு ஏற்க னவே அரசாணை பிறப்பித்துள் ளது. தமிழக அரசு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான புதிய பேருந்துகளை இயக்கி வருவதால் வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனாலும் இது தொடர்பாக அரசு பிறப் பித்த அரசாணை இன்னமும் உள் ளது.

வைப்பாறு தடுப்பணை பிரச்னை: திமுக - அதிமுக வாக்குவாதம்

சென்னை, மார்ச் 27: தூத்துக் குடி மாவட் டம் வைப்பாற் றில் கட்டப் பட்டுள்ள தடுப்பணை குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்க ளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகு றித்து நடந்த விவாதம்:

போ. சின்னப்பன் (அ.தி.மு.க.):

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் வைப்பாற்றின் குறுக்கே கடலுக்கு அருகில் தடுப் பணை கட்ட அதிமுக ஆட்சியில் ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கப்பட் டது.அந்தத் தடுப்பணையை கட லுக்கு அருகில் கட்டாமல் ஒன் றரை கி.மீ. தூரத்தில் திமுக அரசு கட்டியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி யில் திட்டமிடப்பட்ட இடத்தில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

துரைமுருகன்:

சுனாமி அவசர கால நிதி திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், கடல் நீர் உட்புகாமல் இருக்க வைப்பாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.சுனாமி அவசரகால திட்ட மான, இந்த அணைகட்ட கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பணி தொடங்கப்படவில்லை.ஆனால் திமுக ஆட்சியில் 16 மாதத்தில் கட்ட வேண்டிய அணை ஏழு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. (அப் போது துரைமுருகன் ஜெயல லிதா பெயரை குறிப்பிட்டு ஒரு கருத்தைச் சொன்னதால் பேர வையில் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது.)

முதல்வர் கருணாநிதி:

அம்மா ஆட்சி என்று அதிமுக உறுப்பி னர்கள் குறிப்பிடுவது புதிதல்ல.இது இன்று அதிகமாகிவிட்டது.இருந்தாலும் துரைமுருகன் கூறிய வற்றை அவை குறிப்பிலிருந்து நீக் குமாறு கேட்டுக் கொள்கிறேன்.உடனே துரைமுருகன் கூறி யதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தர விட்டார்.

போ. சின்னப்பன்:

கடல்நீர் உட் புகாமல் இருக்க கடலுக்கு அரு கில் கட்டப்பட வேண்டிய தடுப்ப ணையை, ஒன்றரை கி.மீ. தூரத் தில் திமுக அரசு கட்டியுள்ளது.

துரைமுருகன்:

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டமிட்ட இடத்தில் தான் தடுப்பு அணை கட்டப்பட் டது. அணை கட்டும் பணி நடக் கும்போது ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் மேற்பார்வையிட்ட னர்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மனித உரிமைக் கல்வி

சென்னை, மார்ச் 27: மனித உரிமைக் கல் வியை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரி வுபடுத்த வேண்டும் என்று ரவிக்குமார் எம்.எல்.ஏ. சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இது குறித்து நடந்த விவாதம்:

ரவிக்குமார்:

ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் 385 பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மனித உரிமைக் கல்வி நடத்தப் படுகிறது. மதுரையில் உள்ள "மனித உரிமைக் கல்வி நிறுவனம்' என்ற அமைப்பு, மனித உரிமை பாடத்தை நடத்துகிறது.இந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் பள்ளி களில் 9, 10-ம் வகுப்புகளுக்கும், பள்ளிக் கல்வித் துறையால் நடத் தப்படும் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

அமைச்சர் தமிழரசி:

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் மனித உரிமைப் பாடத்தை 9, 10 வகுப்பு மாணவர்களும், ஆசிரியர் களும் விரும்பவில்லை. அதனால் இந்தத் திட்டத்தை விரிவுப்ப டுத்தும் திட்டம் இல்லை. இந்தத் திட்டத்தை மற்ற பள்ளிகளுக் கும் விரிவுபடுத்துவது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக் கொண்டு செல்லப்படும்.

கர்நாடகத்தின் எதிர்ப்பை தடுத்து நிறுத்துங்கள்

சென்னை, மார்ச் 27: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியு றுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியா ழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக ளின் ஏற்போடு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

ஜப்பான் நாட்டு வங்கியின் நிதி உதவி யோடு ரூ. 1,334 கோடி செலவில் ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது.இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து கர்நாடக மாநில பா.ஜ.க.வும், கன் னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. திட்டத்தை எதிர்த்து நீதிமன் றத்தில் வழக்குப் போடப் போவதாகவும் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூ ரப்பா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் நிலவி வரும் இந்த எதிர்ப் புப் போக்கைக் கண்டித்து, ஒகேனக்கல் லில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.அதிமுக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டது.

பேரவையில் ஒருமனதாக தீர்மானம்:

இச்சூழ்நிலையில் தமிழக சட்டப் பேர வையில் மத்திய அரசை வலியுறுத்தி வியா ழக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.பேரவையில் கேள்வி நேரம் முடிந்த தும், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தானாக முன் வந்து இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தின் வறண்ட பகுதிகளான தர் மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நீண்ட காலமாக அரசின் பரிசீலினையில் இருந்து வருகிறது.1997 - ல் இருந்த வாஜ்பாய் அரசும், அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும், தற்போதுள்ள மன்மோகன் சிங் அரசும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

கர்நாடகத்துக்கு பாதிப்பில்லை...

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இந்தத் திட்டத்துக்கு திடீரென எதிர்ப்பு கள் வருவது நமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் தருகிறது.தமிழக எல்லைக்குள் ஒடிக்கொண்டி ருக்கும் காவிரி நீரை எடுத்து, குடிநீர் தேவையினால் தவித்துக் கொண்டிருக் கும் மக்களுக்கு வழங்கும் திட்டமே ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இத னால் கர்நாடக மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் திட் டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை வழங்கும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இந் தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறை யாண்மைக்கும் எதிரானது.

மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை, நீர்வள ஆதாரத் துறை ஆகியவற் றின் அனுமதியை 1998 - ல் பெற்று, ஜப் பான் நாட்டு வங்கியின் நிதி உதவியோடு நிறைவேற்றப்பட உள்ள இந்தத் திட்டத் துக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிரதமருக்கு கருணாநிதி கடிதம்:

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இருக்கும்படி கர்நாடக அரசை வலியுறுத்துமாறு, மார்ச் 17-ம் தேதி எழுதிய கடிதத்தில், பிரதமர் மன் மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.தமிழகம் எப்போதும் பக்கத்து மாநி லங்களுடனும், அந்த மாநில மக்களுட னும் நட்பையும், நல்லுறவையும் பேணி வளர்த்து வருகிறது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற மத் திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கர்நாடக அரசு கடைப்பிடித்து வரும் எதிர்ப்புப் போக் கினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுமா றும் இந்தப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தொழிற்சாலைக்குக் கட்டாய வார விடுமுறை இன்னும் ஒரு மாதம் நீடிக்கும்

சென்னை, மார்ச் 27: தொழிற் சாலைகளுக்கு அறிவிக்கப்பட் டுள்ள கட்டாய வார விடுமுறை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீடிக் கும் என்று மின் துறை அமைச் சர் ஆர்க்காடு வீராசாமி தெரி வித்தார்.இது குறித்து பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத் தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.எஸ்.எஸ். ராமன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.அனைத்துத் தொழிற்சாலைக ளும் ஞாயிற்றுக்கிழமை விடு முறை விடுவதால் 1,500 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகிறது.அதனால்தான் தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து ஒவ் வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த நடைமுறை நீடிக்கும். அதன் பிறகு தொழிற்சாலைகள் வழக் கம்போல செயல்படலாம் என் றார்.

சூரிய ஒளி மின் விளக்குகள்:

இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் முல்லைவேந்தன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. ""மொரப்பூர் தொகு தியில் சித்தேரி மலை பகுதியில் 27 சூரிய ஒளி மின் வீட்டு விளக் குகளும், ஒரு சூரிய ஒளி மின் தெரு விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன.மின்சார வசதி ஏற்படுத்த முடியாத மலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் பரிந்து ரைத்தால் சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும்.குறைந்த மின்அழுத்தம் சரி செய்யப்படும் என்றார்.

கோயில் சொத்துகள் கொள்ளை போகின்றன

சென்னை, மார்ச் 26 : தமிழகத்தில் கோயில் சொத்துகள் கொள்ளை போவதாக சட்டப்பேரவை காங்கி ரஸ் கட்சி துணைத் தலை வர் டி. யசோதா குற்றம் சாட்டினார்.நிதிநிலை அறிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற பொது விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துகள் கொள்ளை போகின்றன.குறிப்பாக, எனது தொகுதியான ஸ்ரீபெ ரும்புதூரில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் கோயில் நிலங்கள் "பிளாட்' போட்டு விற்கப்பட்டு வருகின்றன. எனது தொகுதியில் உள்ள மணவாளம்பாக்கம் ராமர் கோயிலுக்குச் சொந்தமான 23 ஏக் கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு விட்டி ருக்கிறார்கள்.

தலித்துகளை அறங்காவலர்களாக நிய மிக்க வேண்டும்:

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்தக் கோயில் அறங் காவலர் குழுவில் தலித்துகள் யாரும் இல்லை. ஆன்மிகத்தில் புரட்சி செய்த ராமானுஜர் கோயில் அறங்காவலர்களாக தலித்துகளை நியமனம் செய்ய வேண்டும்.அமைச்சர் பெரியகருப்பன்: இந்தக் கோயில் தொடர்பான வழக்கு நிலுவை யில் உள்ளது.

அழைப்பிதழில் பெயர் இல்லை:

எனது தொகுதியில் நீதிமன்றத் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால் அதற்கான அழைப்பிதழிலும், கல்வெட்டிலும் எனது பெயர் இல்லை.

அமைச்சர் துரைமுருகன்:

நீதிமன்றம் வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள்தான் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் நீதி மன்ற திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ-களை அழைப்பதில்லை. நீதிமன்ற திறப்பு விழாக்களை அரசு நடத்துவதில்லை.

எனது சொந்த ஊரான குடியாத்தத்தில் நடந்த நீதிமன்றத் திறப்பு விழாவுக்கு எனக்கே அழைப்பு இல்லை.இது குறித்து நான் பலமுறை சம்பந்தப்பட் டவர்களிடம் எடுத்துக் கூறி விட் டேன். ஆனால், நீதிமன்றத்தில் உள்ள சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். உறுப் பினர் யசோதாவின் கருத்தை நானும் ஆத ரிக்கிறேன்.

திருமணம் ஆகாதவர்களுக்கு உதவித் தொகை தாருங்கள்

சென்னை, மார்ச் 26 : திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கோ.அரி கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன்கி ழமை நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் சமுதாயத்தில் அநாதை கள் போல உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.நிலைக்கண்ணாடி: என்னதான் சீவி சிங்காரத்து அலங்காரம் செய்தா லும் அதைப் பார்ப்பதற்கு நிலைக் கண்ணாடி வேண்டும். அதுபோல இந்த ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய நிலைக்கண்ணாடி அதி முக ஆட்சியாகும்.

அதிமுக ஆட்சியில் மழை நீரைச் சேகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அதனால் நிலத்தடி நீர் அளவு உயர்ந்துள்ளது என்று அறி ஞர்கள் பாராட்டியுள்ளனர்.இந்த நிதிநிலை அறிக்கையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த எந் தத் திட்டமும் இல்லை. அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு என் பதே இல்லை.

இப்போது தொழிற் சாலைகளுக்கு விடுமுறை விடக்கூ டிய அளவுக்கு மின் தட்டுப்பாடு உள்ளது.நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மாவட்ட, நகராட்சி, ஊராட்சி மருத்துமனைகளில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார் அரி.

மதுவிலக்கு: திமுக - பாமக காரசார விவாதம்

சென்னை, மார்ச் 26 : மதுவி லக்கை அமல்படுத்துவது தொடர்பாக பேரவையில் பாமக உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற் றது.சட்டப் பேரவையில் புதன்கி ழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினர் "எதிரொலி' மணியன் பேசினார். அப்போது, இந்த விவாதம் இடம் பெற்றது.

எதிரொலி மணியன்:

பிரிட்ட னில் ஆளும் கட்சிக்கு உதவும் வகையில் எதிர்க் கட்சியினர் நிழல் பட்ஜெட்டை வெளியிடு கிறார்கள். அதுபோல இந்தியா வில் அரசுக்கு உதவுவதற்காக நிழல் பட்ஜெட்டை பாமக வெளியிட்டு வருகிறது. பாமக நிதிநிலை அறிக்கையில் கூறப் பட்டிருந்த பல திட்டங்கள் பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள் ளன. அதற்காக அரசுக்கு நன்றி.

வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுத்ததோ இல் லையோ, வீட்டுக்கு ஒரு குடிகா ரர்களை உருவாக்கி வருகிறது."டாஸ்மாக்' மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் தண்ணீ ரால் வரும் வருமானம் அல்ல.தாய்மார்களின் கண்ணீர் மூலம் கிடைக்கும் வருமானம்.மது மூலம் கிடைக்கும் வருமா னம் "குஷ்டரோகி கையினால் கொண்டு வரும் வெண்ணெய் போன்றது' என்று அண்ணா கூறியுள்ளார். அண்ணாவின் நூற்றாண்டு விழா நேரத்திலா வது மதுவைத் தடை செய்ய கூடாதா? திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் 8,000 மதுக் கடைகளை திறந்துள்ளனர்.

பேரவைத் துணைத் தலை வர் வி.பி. துரைசாமி:

இரண்டு பேரையும் (திமுக, அதிமுக) ஒரே நேரத்தில் பகைத்துக் கொண் டால் எங்கே போவீர்கள்?

அமைச்சர் எ.வ. வேலு:

தமிழ கத்தின் அண்டை மாநிலங்க ளான கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களில் மதுவி லக்கு இல்லை. தமிழகத்தில் மட் டும் மதுவிலக்கைக் கொண்டு வந்தால் தமிழர்களின் வருமா னம் அண்டை மாநிலங்களுக் குச் சென்று விடும்."

எதிரொலி' மணியன்:

மகா ராஷ்டிரத்தில் மதுவைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதன் விவரங் களை ராமதாஸ் முதல்வரிடம் நேரில் அளித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி:

தமிழகத் தில் மட்டும் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. இந் தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் தமிழ கத்திலும் அது நடைமுறைப்ப டுத்தப்படும்.

வேல்முருகன் (பாமக):

தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக பல திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது.அதுபோல மதுவிலக்கை அமல் படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க லாம்.

ஆர்க்காடு வீராசாமி:

மதுவி லக்கை அமல்படுத்தினால் தமிழ கத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். சாதாரண மக்கள் பலர் சிறையில் இருக்க நேரிடும்.

வேல்முருகன்:

அரசு காவல் துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்தால் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழித்து விடலாம். டாஸ்மாக்கில் வரு மானத்தை எப்படி பெருக்கலாம் என்று திட்டமிடும் அரசால் கள் ளச் சாராயத்தை ஒழிக்க முடி யாதா?

ஆர்க்காடு வீராசாமி:

மதுக்க டைகள் இருப்பதால்தான் கள் ளச் சாராயம் இல்லை. பாமகவி னர் மத்திய அமைச்சர் அன்பு மணி மூலமாக மத்திய அரசிடம் சொல்லி இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யலாம்.

மழை வெள்ளத்துக்கு இதுவரை 24 பேர் பலி

மழை வெள்ளத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந்தனர் என்று ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.மழை வெள்ளச் சேதம் குறித்து பேரவை யில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை வெள்ளத்தால் இதுவரை 24 பேர் உயிரிழந் தனர். 804 ஆடு, மாடு போன்ற கால்நடை கள் உயிரிழந்தன. மொத்தம் 5,782 குடிசை கள் சேதமடைந்துள்ளன. மாவட்ட ஆட்சி யர்களிடம் இருந்து வந்த தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் 47,257 ஹெக்டேர் நெல் பயிர்களும், 2,79,143 ஹெக்டேர் தானியங்கள், பருப்பு வகை பயிர்களும், 62,882 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும், 41,068 ஹெக்டேர் இதர பயிர்களும் ஆக மொத்தம் 10,62,965 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மாநிலம் முழுவதும் 9,863 கி.மீ. சாலை களும், 945 பாலங்களும், 747 குளங்கள், வாய்க்கால்களும் சேதமடைந்துள்ளன.விருதுநகர், தூத்துக்குடி, திரு நெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்க ளில் வெள்ளப் பாதிப்புகளை நான் நேரில் பார்வையிட்டேன். மக்களின் துயரத்தில் இந்த அரசு பங்கு கொள்ளும் என்றார் மு.க. ஸ்டாலின்.

வெள்ள நிவாரணம் - ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்வு

ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்வு சென்னை, மார்ச் 26 : மழை வெள்ளத்தால் சேதமான நெல் பயிருக்கான நஷ்டஈடு ஹெக்டேருக்கு ரூ. 7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், சட் டப் பேரவையில் அறிவித்தார்.

மார்ச் 21-ம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் நெல் பயிர் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 4,000 வழங்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டது.மழை, வெள்ளச்சேதம் குறித்து சட்டப் பேரவை யில் புதன்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் பேசினர்.இறுதியில் விவாதத்துக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல் பயிருக்கு, ஹெக்டேருக்கு (ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர்) ரூ. 7,500 வழங்கப்படும். அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்குத்தான் நிவாரணம் வழங்கப்ப டும் என்ற விதி மாற்றப்பட்டு, சேதமடைந்த நிலங்கள் அனைத்துக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.மழையை நம்பியிருக்கும் பகுதிகளில் பயிரிடப் பட்ட பயிர்களின் சேதம் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஹெக்டேருக்கு ரூ. 2,000 வழங்கப்படும்.பாசன வசதி உள்ள இடங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரமும், நிரந்தர பயிர்களான மா, புளி போன்ற பயிர்களுக்கு ஹெக் டேருக்கு ரூ. 6,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

ரூ. 100 கோடி ஒதுக்கீடு:

மார்ச் 21-ம் தேதி நடந்த கூட்டத்தில் வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு அறி விக்கப்பட்ட தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை வழங்கப் பட்டு வருகின்றன.முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் பாத்திரங்கள் வாங்கவும், உடைகள் வாங்க ரூ. ஆயிரமும் வழங்கப்படும்.

மாடு இறந்தால் ரூ. 10,000:

மழையினால் இறந்த பசு, காளை, எருமை மாடுகளுக்கு ரூ. 10 ஆயிரமும், கன்றுகளுக்கு ரூ. 5 ஆயிரமும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங் கப்படும்.குடும்பத்துக்கு ஒரு கறவை மாடு அல்லது நான்கு சிறிய கறவை இனங்களுக்கும், பாரம் சுமக்கும் விலங்குகளில் ஒரு பெரிய இனம் அல் லது இரண்டு சிறிய இனங் களுக்கு மட்டுமே தற் போது நிவாரணம் வழங் கப்படுகிறது.இந்த எண்ணிக்கை வரம்பு நீக்கப்பட்டு இறந்த அனைத்து கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். என்றார் மு.க.ஸ்டாலின்.