சென்னை, ஏப். 25: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
அ. தமிழரசு (பாமக):
தமிழகத்தில் சுமார் 3,60,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அவர்கள் தயாரிக்கும் தோல் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கொசுவலை போன்ற பொருட்களை விற்பனை செய்ய சென்னையிலும், மாவட்ட மற்றும் ஒன்றிய தலைநகரங்களிலும் வணிக வளாகம் கட்ட அரசு முன்வருமா?
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
தமிழ கத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரூ. 10.72 கோடி செலவில் 36,300 சதுர அடி பரப்பில் பொருட்காட்சி மற்றும் விற்பனை அரங்கம் கட்டப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் கட்டப்பட இருக்கும் இந்த வளாகத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய 29 மாவட்டத் தலைநகரங்களில் "பூமாலை' வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.
அ. தமிழரசு:
ஓமலூர் தொகுதியில் சுமார் 1,300 மகளிர் சுயஉதவிக் குழுக் கள் உள்ளன. எனவே அங்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இடைத் தரகர்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் மு.க. ஸ்டாலின்:
அங் கொன்றும் இங்கொன்றுமாக இடைத்தரகர்கள் பிரச்னை இருக்கிறது. இடைத்தரகர்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment