Saturday, April 26, 2008

1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம்

சென்னை, ஏப். 25: வோளாண் துறையில் 1,707 வேளாண் அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

ஞானசேகரன் (காங்கிரஸ்):

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை யில் "நவ்லாக்' தோட்டக்கலை பண்ணை உள்ளது. எனவே அங்கு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். தமிழகத்தில் வேலை இல்லாத வேளாண் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகம் முழுவதும் 5,520 வேளாண் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். 1,648 வேளாண் பட்டதாரிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர். 520 வேளாண் அலுவலர்களையும், 47 தோட்டக்கலை அலுவலர்களையும் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். வேளாண்துறையில் காலியாக உள்ள 1,707 வேளாண் அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

வீ.ஏ.டி. கலியவரதன் (பாமக):

எனது முகையூர் தொகுதியில் எந்தக் கல்லூரி யும் இல்லை. எனவே வேளாண்மைத் தொழில் கல் லூரியாவது அமைக்கப்ப டுமா?

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:

தமிழகத்தில் 12 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கே முழுமையாக வேலை வழங்க முடியவில்லை. தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை படிக்க போதுமான இடங்கள் உள்ளன. ஒரு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமானால் 200 ஏக்கர் நிலமும், ரூ. 150 கோடியும் தேவைப்படும். பணத்தைக்கூட எப்படியாவது திரட்டி விடலாம். ஆனால் 200 ஏக்கர் நிலத்தை உடனடியாக கையகப்படுத்துவது சாத்தியமற்றது. தமிழகத்தில் 56 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சார்ந்துள்ளனர். தற்போது புதிதாக வேளாண் கல்லூரிகள் அமைக்கும் திட்டம் இல்லை. எதிர்காலத்தில் இது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

No comments: