சென்னை, ஏப். 25: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நலனுக்காக தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தனது குடும்பத்தினரின் நிறுவனம் லாபம் பெற வேண்டும் என்பதற்காக பெட்ரோலியத் துறையிடம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சலுகை பெற்றதாக ஊடகங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளன.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். ஆனால் நான் செய்ததில் என்ன தவறு என்று சவால் விட்டிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு. இதற்காக பிரதமர் அலுவலகம் எட்டு முறை பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, மாநிலங்களவையில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி.யை வெளியே அனுப்பி இருக்கலாம். தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று டி.ஆர். பாலு மனப்பால் குடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அனுப்பாமல் தடுக்கும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதை தேர்தல் நேரத்தில் நிரூபிப்பார்கள் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment