சென்னை, ஏப். 15: தமிழக சட்டப் பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர். அக்கட்சியைச் சேர்ந்த கோ.அரி, வி.பி. கலைராஜன் ஆகி யோர் நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவாறு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவை கூடியதும் உளவுத் துறையினரால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி ஒட் டுக் கேட்கப்படுவதாக வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஓ. பன் னீர்செல்வம் பிரச்னையைக் கிளப் பினார்.அதற்கு ஞாயிற்றுக்கிழமையே அரசு விளக்கம் அளித்து விட்டது என்று கூறி பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார்.
அப்போது குறுக் கிட்ட முதல்வர் கருணாநிதி, "அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி களை ஒட்டுக் கேட்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை தவறு அல்லது சரி என்று வாதிட்டால் அதற்கு பதில ளிக்க தயாராக இருக்கிறேன்' என்றார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி கொடுத்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பதிலளிக்க அரசு தயார்:
அப் போது முதல்வர் கருணாநிதி எழுந்து, "எதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அதனைச் சொன்னால் விளக்கம் அளிக்க அரசு தயாராக உள்ளது' என்றார். முதல்வர் பேச ஆரம்பித்த பிறகும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் "ராஜிநாமா செய், ராஜி நாமா செய்' என்று கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி பேரவைத் தலைவர் எச்சரித்தார். ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறு இருந்தனர். உடனே அவை முன்னரும், நிதி அமைச்சருமான க. அன்பழகன் எழுந்து, "முதல்வர் பேசும்போது இப்படி நடந்து கொள்வதைவிட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்வது நல்லது' என்றார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். காவலர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக்குள் நுழைந்ததும் அதிமுகவினர் தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் பேரவையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இருவர் சஸ்பெண்ட்:
பேரவையில் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன், வரு வாய்த்துறை அமைச்சர் ஐ. பெரி யசாமி இருவரும் தங்களது துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முடித்ததும், அவை முன்னவரும், நிதி அமைச்சருமான க. அன்பழகன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியதாவது:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் எழுப்பிய பிரச்னை குறித்து முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏவான வி.பி.கலைராஜன் தனது இருக்கையில் எழுந்து, முதல்வரின் எதிரில் நின்றுகொண்டு அவரது பேச்சை தடுக்க முற்பட்டார். அதுபோல மற்றொரு அதிமுக எம்.எல்.ஏவான கோ. அரி, முதல்வர் பேச முடியாதபடி கூச்சலிட்டார். எனவே அவர்கள் இருவரையும் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களில் கலந்து கொள்ள முடியாதபடி தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
பிறகு இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து வி.பி. கலைராஜன், கோ. அரி இருவரும் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
No comments:
Post a Comment