பூங்கோதை ராஜிநாமா சென்னை, மே 14: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகவும், அது ஆய்வில் இருப்பதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். பேரவையில் புதன்கிழமை இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை யர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்ப டுத்தியுள்ளது.இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார்.இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப் பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.
தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதா கப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட் டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைப் பதா அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் சேர்ப்பதா என்பது குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment