Thursday, April 17, 2008

எஸ்.சி. மக்கள் கோயில் கட்ட ரூ.50 ஆயிரம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை, ஏப். 16: தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் கோயில் கட்ட ரூ. 50,000 வழங்க வேண்டும் என்று மார்க் சஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி கோரிக்கை விடுத்தார். பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

பாலபாரதி:

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கோயில் கட்ட தற்போது ரூ. 25,000 வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்தத் தொகையில் கோயில் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தத் தொகையை உயர்த்தி ரூ. 50,000 வழங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

தா. மலரவன் (அதிமுக):

கோவை மக்களின் காவல் தெய்வமான அருள்மிகு கோணியம்மன் கோயிலில் ராஜ கோபுரம் கட்ட 2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் கோபுரம் கட்ட திமுக அரசு மீண்டும் அடிக்கல் நாட்டியுள்ளது. கோபுரம் கட்டும் பணி எப்போது முடிக்கப்படும்?

கே.ஆர். பெரியகருப்பன்:

கோவை கோணியம்மன் கோயிலில், பழைய ராஜகோபுரம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. அஸ்திவாரப் பணிகள் முடிந்து, தரைமட்டம் வரை கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதுவரை 15 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தா. மலரவன்:

மருதமலை முருகன் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி மந்தமாக உள்ளது. அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளன.

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்:

யாருடைய ஆட்சியில் அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்பட்டது என்பதை மன சாட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும்.

No comments: