சென்னை, ஏப். 17: விலைவாசி உயர்வு பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் இடதுசாரிகள் பேரவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தன. பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இது குறித்து நடைபெற்ற விவாதம்:
வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):
மத்திய அரசின் தவறான கொள்கையினால் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்):
வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு உடனடியாக ஆன்-லைன் வர்த்தகத்தையும், உணவுப் பொருள்களின் ஏற்றும திக்கும் தடை விதிக்க வேண்டும்.மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்து நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்:
இந்தக் கூட் டத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து விலைவாசி உயர்வு குறித்து நாங்கள் பேரவையில் பிரச்னை எழுப்பி வருகிறோம். ஆனால் விலைவாசி மட்டும் குறையவில்லை. விலைவாசி மத்திய, மாநில அரசுகளின் கைகளைவிட்டு நழுவி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 20 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளது இதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய் கிறோம்.
டி. சுதர்சனம் (காங்கிரஸ்):
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நான்கு ஆண்டுகளாக மத்திய அர சுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது தேர்தல் வருகிறது என்பதற்காக விலைவாசி உயர்வு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
விலைவாசி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்கிறார்கள். சீனாவில் 10.4 சதவீதமும், அமெரிக்காவில் 17.6 சவீதமும் பணவீக் கம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது கச்சா எண்ணெய் ஒரு பீப் பாய் 44 டாலராக இருந்தது. இப் போது 115.5 டாலராக உயர்ந்துள்ளது. அரபு நாடுகளில் கச்சா எண் ணெயின் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாகத்தான் விலைவாசி உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எம்.பிக்கள் இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன் உறுப்பினராக உள்ளார்.அங்கு அவர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பி இருக்கலாம். வேண்டுமென்று தேர்தல் "ஸ்டண்டுக்காக' இந்தப் பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். எதிரில் குத்தாமல் முதுகில் குத்தியிருக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதி:
விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் பேசி, அதற்கு விளக்கம் பெறாமல் கம்யூனிஸ்ட் நண்பர்களும், அ.தி.மு.க.வினரும் வெளிநடப்புச் செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது. வெளிநடப்பு என்ற ஜனநாயக முறையை அவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நான் எரிச்சலோ, காழ்ப்புணர்வோ கொள்ளவில்லை என்றார்.
மார்க்சிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்புச் செய்த சற்று நேரத்தில் மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாக புறக்கணித்தனர்.
No comments:
Post a Comment