சென்னை, ஏப். 16: மதுரை, திருச் சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார். பேரவையில் புதன்கிழமை, கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
நன்மாறன் (மார்க்சிஸ்ட்):
மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்று கேட்டபோது, பல மாவட்டங்களுக்கும் அறிவித்தீர்கள். ஆனால் அங்கெல்லாம் பூங் காக்கள் மணம் பரப்பத் தொடங்கிவிட்டன. நான் கடந்த முறை கேட்டபோது, மதுரையில் விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவித்தீர்கள். அது எப்போது நடைபெறும்?
முதல்வர் கருணாநிதி:
திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எல்காட் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதில் கோவை, சேலம், திருநெல்வேலி பூங்காங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க விரைவான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் சில வாரங்களில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.
அப்பாவு (திமுக):
ராதாபுரத்தில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?
முதல்வர் கருணாநிதி:
தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப் புகளை ஆராய்ந்து கண்டறிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆய்வு செய்து பல திட்டங்களை அரசுக்கு தந்திருக்கிறார்கள். அதில் ஒரு திட்டமான நாங்குனேரி திட்டத்தை நிறை வேற்ற கடந்த வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல செழிப்பானத் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும்.
வை. சிவபுண்ணியம் (கம்யூ னிஸ்ட்):
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தைக் காரணம் காட்டி எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படுவதில்லை. எனவே ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிறார்கள். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் அதி கமாக உள்ளன. சாலை வசதியும், விமான வசதியும் உள்ளன. எனவே தஞ்சையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி:
திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கும் பணி முடிந்தவுடன் தஞ்சையில் அமைக்கப்படும்.
ஏ.கே. போஸ் (அதிமுக):
மதுரையில் எங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். இலந்தைக்குளம் என்ற இடத்திலா அல்லது காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலா?
முதல்வர் கருணாநிதி:
இலந்தைக்குளம் பகுதியில் அமைக்க ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறுப்பினர் ஏ.கே.போஸýக்கு எந்தப் பகுதியில் என்று குறிப்பிட்டு விழா அழைப்பிதழ் அனுப்பப்படும். தவறாமல் அவர் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment