Thursday, April 24, 2008

இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊதியம்

சென்னை, ஏப். 22: இளம் வழக்க றிஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டம், நீதி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

இளம் வழக்கறிஞர்கள் ஆரம்ப காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இளம் வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு 3 ஆண்டுகளுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பெருநகரங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பயணப்படி வழங்க வேண்டும். தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உருவாக்க வேண்டும். ஒரத்தநாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றார்.

எம்.வி.ஆர். வீரகபிலன் (அதிமுக):
கடலில் இருந்து 1,000 மீட்டர் தொலைவில் குடியிருக்கும் மீனவர்களுக்கும் சுனாமி நிவாரணமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கும் முன் விலைவாசியை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூட்டணி பற்றிதான் கவலைப்படுகின்றன.

வீர இளவரசன் (மதிமுக):

நீதி மன்றமும், சட்டப்பேரவையும் ஒன்றையொன்று சார்ந்து இருந்தால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். எந்த நோக்கத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கம் பாதிக்கப்படாத வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு "தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் சூட்ட வேண்டும்' என்றார்.

No comments: