Thursday, April 24, 2008

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம்:தமிழக கோரிக்கை ஏற்பு

சென்னை, ஏப். 22: உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். பேரவையில் செவ்வாய்க்கிழமை விதி எண் 110-ன் கீழ் அமைச்சர் ஸ்டாலின் படித்த அறிக்கை:-

ஏப்ரல் 22, 23, 24 ஆகிய தேதிகளில் தில்லியில் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் தேசிய மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறும் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 2007-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, மாநாட்டில் கலந்து கொள்ள 68 பிரதிநிதிகளின் பட்டியலை தயார் செய்து கடந்த மார்ச் 20- ம் தேதி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

இதற்கிடையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் வரைவு சாசனம் ஒன்றை தயாரித்தது. அதில், ""ஊராட்சிகள்'' என்ற பொருளை மாநில அரசுப் பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, ஊராட்சிகள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பது போன்ற ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்தது. "இந்த வரைவு சாசனத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை நீக்க வேண்டும். அதன் அடிப்படை யில்தான் தில்லி மாநாட்டில், தமிழ் நாட்டில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மார்ச் 29-ம் தேதி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் ஊராட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்தது.

பிரதமர் கடிதம்:

மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட "ஊராட்சிகள்' என்ற பொருளை மத்திய பட்டியலுக்கோ, இணைப்பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்று வரைவு சாசனத்தில் உள்ள பரிந்துரையை இந்த சாசனத்தில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஏப்ரல் 21-ம் தேதி கிடைத்தது.

இந்தப் பரிந்துரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டாலும், தேசிய வளர்ச்சி மன்றம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகுதான் இறுதி செய்யப்படும் என்றும் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனாலும் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள மாநாட்டில் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகளை அனுப்ப கால அவகாசம் இல்லை. அதனால் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வரைவு சாசனத்தின் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகள் குறித்து தமிழக அரசின் நிலையை மத்திய அரசு ஏற்றுக் ùகôண்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் மு.க. ஸ்டாலின்.

No comments: