சென்னை, மே 5: ஸ்பிக் உரத் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கோரிக்கை விடுத்தார். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
தனியாரிடம் உள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சாத்தான்குளத்தில் டைட்டானியம் தொழிற்சாலையை பொதுத்துறை நிறுவனமாக தொடங்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக அதிகமான நிலம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண் டும். இதில் அரசின் கொள்கை என்ன என்பதை வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களை அனும திக்க முடியாது என்று ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வா கம் பகிரங்கமாக கூறியுள்ளது. இதனை அரசு அனுமதிப்பது ஏன்? மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாக இரும்பை மூலதனமாகக் கொண்டுள்ள 52,000 சிறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரும்பு விலை உயர்வால் கிரைண்டரின் உற்பத்தி செலவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
30 சதவீதம் சிறிய தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளது. பஞ்சாலைகள் கடும் நெருக்கடியில் உள்ளன. பஞ்சு ஓர் அபூர்வ பொருளாக மாறியுள்ளது.அடுத்த ஆண்டுக்கான பருத்திக்கு இப்போதே விலைபேசி முடித்து விட்டார்கள் என்றார் பாலபாரதி.
ராமசாமி (கம்யூனிஸ்ட்):
நான்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நஞ்சை நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளனர். நிலத்தை கையகப்படுத்தும்போது நஞ்சை நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதரமாக இருந்த பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியர்கள் அதிகமாக உண்பவர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். இதனை பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட யாரும் கண்டிக்கவில்லை என்றார்.
ஞானதாஸ் (மதிமுக):
தமிழக அரசின் கவனம் தென்தமிழகத்தின் பக்கம் திரும்ப வேண்டும். பட்டாசு ஏற்றுமதியில் உள்ள தடைகளைப் போக்க வேண்டும். அச்சுத் தொழிலுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அச்சுத் தொழிலின் தலைநகராக சிவகாசியை மாற்ற வேண்டும். குடிசை தீப்பெட்டி தொழிலின் பிரச்னைகளை தீர்க்க உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளை அகற்ற அரசு கொள்கையை வகுக்க வேண்டும். மதுரை திருமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை உடனே அமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment