Friday, April 11, 2008

படிப்படியாக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம்

சென்னை, ஏப். 11: தமிழகம் முழு வதும் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார். பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

சு.குணசேகரன் (கம்யூனிஸ்ட்):

சிவகங்கை தொகுதி காளையார்கோயிலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. இந்த சார் பதிவாளர் அலுவலகத்துக்கு ஆண்டுக்கு ரூ. ஒன்றரை கோடி வருமானம் வருகிறது. ஆனால் இந்த அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் சிறு அறையில் இயங்கி வருகிறது. எனவே சொந்தக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

காளையார்கோயில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாதம் தோறும் ரூ.3,115 வாடகை கொடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 568 சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. அதில் 311 அலுவலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 257 அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 788 வாடகையாக கொடுக்கப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2006-2007-ல் 10 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும், 2007-2008-ல் 15 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.ராஜா (திமுக):

தாம்பரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் கிழக்கு தாம்பரத்திலும், மேற்கு தாம்பரத்திலும் மாறி மாறி இயங்கி வருகிறது. எனவே தாம்பரத்தில் சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

அமைச்சர் சுரேஷ் ராஜன்:

சார் பதிவாளர் கட்டடம் கட்ட தனியாரிடம் இருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தந்தாலோ, அரசுக்கு சொந்தமான நிலம் இருந்தாலோ அங்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

No comments: